இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குற்றியலுகரப் புணரியல் 229
முன்னர் யா மொழியென்னாது வினாவென்றதனான் ஏழாவதன் இடப்பொருட்டாய் முந்து, பண்டு, இன்று, அன்று, என்று எனவரும் பிறவும் இயல்பாதல் கொள்க என்பர் நச்சினார்க்கினியர்.
உண்டென் கிளவி உண்மை செப்பின்
முந்தை இறுதி மெய்யொடுங் கெடுதலும்
மேனிலை யொற்றே ளகார மாதலும்
ஆமுறை யிரண்டும் உரிமையு முடைத்தே
வல்லெழுத்து வரூஉங் காலை யான. (தொல்,430)
இது மென்றொடர் மொழியுள் வினைக்குறிப்பாய் நின்ற தோர் சொல் பண்பை உணர்த்துங்கால் வேறு முடிபு பெறுதல் கூறுகின்றது.
(இ-ள்) உண்டு என்னும் சொல், வினைக்குறிப்பை புணர்த்தாது ஒரு பொருள் தோன்றுங்காற்றோன்றி அது கெடுந்துணையும் உண்டாய் நிற்கின்ற உண்மைத் தன்மையாகிய பண்பை யுணர்த்தி நிற்குமாயின், வல்லெழுத்து முதன்மொழி வருங்காலத்து அவ்வுண்டென்னுஞ் சொன் முன்னர் நின்ற குற்றுகரம் தான் ஏறி நின்ற ணகர வொற்று ளகர வொற்றாய்த் திரிதலுமாகிய அவ்விருநிலையையும் உடைத் தென்பதாம். இவ்விருமுடியும் பெறுமென்றது வல்லெழுத்துக்கள் பகரமுதன் மொழி வருமிடத்தென்றும் மற்றைய மூன்றெழுத்தின்கண் ஈறு கெடாதே நின்று முடியுமென்றுங் கூறுவர் இளம்பூரணர்.
(உ-ம்) உண்டு+பொருள் - உள்பொருள் எனவரும்.
உரிமையும் உடைத்தே என்ற உம்மையால் இவ்விரு முடியும் பெறாது உண்டு பொருள் என இயல்பாய் வருதலையுங் கொள்வர் நச்சினார்க்கினியர்.
இருதிசை புனரின் ஏயிடை வருமே. (தொல்.431)
இது குற்றுகர வீற்றுத் திசைப்பெயர்க்கு அல்வழி முடிபு கூறுகின்றது.
(இ-ள்) குற்றுகர விற்றுத் திசைப் பெயர்களுள் இரண்டு பெருந்திசையும் தம்மிற்புணருமிடத்து ஏயென்னுஞ் சாரியை இடையே வந்து முடியுமென்பதாம்.
(உ-ம்) தெற்கேவடக்கு, கிழக்கே மேற்கு எனவரும். இவை உம்மைத்தொகை.