பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

தொல்காப்பியம்-நன்னூல்



ஒன்பஃது என நிறுத்திப் பஃது என்பதனை வருவித்து வேண்டுஞ் செய்கை செய்து இச்சூத்திரத்தின் முடிக்கின்றராதலின் ஒன்பஃதென்பதிற் பஃதென்னுஞ் சொற்கெடுதலைப் பகர வாய்தமென்னாத முறையன்றிக் கூற்றினாற் கொள்ள வைத்தார் என்றல் பொருந்தாது.

       அளந்தறி கிளவியும் நிறையின் கிளவியுங் 
       கிளந்த இயல தோன்றுங் காலை.               (தொல்.445)

இது மேற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பானெண்களோடு அளவுப் பெயரும் நிறைப்பெயரும் புணருமாறு கூறுகின்றது.

   (இ-ள்) முற்கூறிய ஒன்றுமுத லொன்பதெண்களின் முன்னர் அளந்தறியப்படும் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்து புணருமாயின், ஆறனிறுதியல்லாத குற்றுகரம் மெய் யொடுங் கெட்டு முதலிரெண்ணினொற்று ரகரமாய் உகரமேறி இரண்டென்பதனிடை நின்ற ரகர வுயிர்மெய்கெட்டு, மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி, நான்கனொற்று வன்கணத்து றகரமாயும் எட்டனொற்று ணகரமாயும் முடியும் என்பதாம்.
   (உ-ம்) ஒருகலம், இருகலம் எனவும், ஒருகழஞ்சு இரு கழஞ்சு எனவும், நாற்கலம், எண்கலம் எனவும், நாற்கழஞ்சு, எண்கழஞ்சு எனவும் வரும்.
       மூன்ற னொற்றே வந்த தொக்கும்.     (தொல்,447) 
   இது மேல் மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறுமுடிபு கூறுகின்றது.
   (இ-ள்) மூன்றென்னும் எண்ணின் னகர வொற்று வருமொழியாய அளவுப்பெயர் நிறைப் பெயர்களின் முன்னர் வந்த வல்லொற்றோடு ஒத்த ஒற்றாய்த் திரிந்து முடியும். எ-று.
   (உ-ம்) மூன்று+கலம் = முக்கலம், சாடி, தூதை, பானை எனவும், மூன்று+கழஞ்சு = முக்கழஞ்சு, கஃசு, தொடி, பலம் எனவும் வரும்.
       ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும்.       (தொல்.448)

இதுவும் அது.

   (இ-ள்) ஐந்தென்பதன் நகரவொற்று வருமொழி வல்லெழுத்திற்கேற்ற மெல்லெழுத்தாகத் திரிந்து முடியும் எ-று.