இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
238
தொல்காப்பியம்-நன்னூல்
மேற்கூறியவாறே மகரமும் பகரமுமாகாது வருமொழி முதல் வந்த வொற்றோடு ஒத்தவொற்றாய்த் திரிந்து முடியும் (எ-று)
(உ-ம்) ஐந்து+நாழி - ஐந்நாழி, ஜம்மண்டை, மூன்று நாழி = முந்நாழி, மும்மண்டை எனவரும். மூன்றும் ஐந்தும் என்னாத முறையன்றிக் கூற்றினால் நான்கு-நாழி = நானாழி என்னும் முடியின்கண் விகாரமாகிய னகரத்தின் முன்னர் வருமொழி நகரத்திரிபும், அதுகாரணமாக நிலைமொழி னகரக்கேடும் கொள்ளப்பட்டன என்பர் இளம்பூரணர்.
மூன்ற னொற்றே வகரம் வருவழித் தோன்றிய வகரத் துருவா கும்மே. (தொல்,452,)
(இ-ள்) மூன்றென்னும் எண்ணின்கணின்ற னகரவொற்று வகர முதன்மொழி வருமிடத்து அவ் வருமொழி வகரமாய்த் திரிந்து முடியும் (எறு).
(உ-ம்) மூன்று+வட்டி = முவ்வட்டி எனவரும்.
தோன்றிய என்றதனான் முதல் நீண்டு வகரவொற்றின்றி மூவட்டியென்றுமாம் என்பர் உரையாசிரியர்.
நான்க னொற்றே லகார மாகும். (தொல்.453)
இதுவும் அது.
(இ~ள்) நான்கென்னும் எண்ணின்கணின்ற னகரவொற்று வகர முதன்மொழி வந்தால் லகரவொற்றாகத் திரிந்து முடியும்.
(உ-ம்) நான்கு+வட்டி = நால்வட்டி எனவரும்.
ஐந்த னொற்றே முந்தையது கெடுமே. (தொல், 454)
இதுவும் அது.
(இ-ள்) ஐந்தென்னும் எண்ணின்கணின்ற நகரவொற்று வகர முதன்மொழி வருமிடத்துக் கெட்டு முடியும் எறு.
(உ-ம்) ஐந்து+வட்டி = ஐவட்டி எனவரும். முந்தை என்றதனான் நகரவொற்றுக் கெடாது வருமொழி வகரமாய்த் திரிந்து ஐவ்வட்டி என வருதலுங் கொள்வர் உரையாசிரியர்.
முதலீ ரெண்ணின்முன் உயிர்வரு காலைத் தவலென மொழிய உகரக் கிளவி முதனிலை நீட லாவயி னான. (தொல்,455)