இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குற்றியலுகரப் புணரியல் 239
இது மாட்டேற்றான் எய்திய உகரத்திற்குக் கேடுகூறி முதல் நீள்க என்றலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.
(இ-ள்) ஒரு, இரு என முடிந்து நின்ற முதலிரெண்ணின் முன் உயிர் முதன்மொழி வருமிடத்து நிலைமொழியுகரமாகிய எழுத்துக் கெடுமெனச் சொல்வர். அவ்விடத்து அவ்வெண் களின் முதலெழுத்துக்கள் நீண்டு முடியும் எறு.
(உ-ம் ஒரகல், ஈரகல், ஒருழக்கு, ஈருழக்கு என வரும்.
மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும் தோன்றிய வகரத் தியற்கை யாகும். (தொல்,456)
இதுவும் அது.
(இ-ள்) மூன்று, நான்கு, ஐந்து, என்னுமெண்களின் முன்னர்த் தோன்றி நின்ற வகரம் வருமொழிக்குக் கூறிய இயல்பாக மூன்றின்கண் வகரவொற்றாயும் நான்கின்கண் லகர வொற்றாயும், ஐந்தின்கண் ஒற்றுக் கெட்டும் முடியும் என்பதாம்.
(உ-ம்) முவ்வகல், முல்வழக்கு, நாலகல், நாலுழக்கு, ஐயகல், ஐயுழக்கு எனவரும்.
மூன்று என்பது முதல் நீண்டவிடத்து நிலைமொழி னகர வொற்றுக் கெடுதல் “தோன்றிய” என்ற மிகையாற் கொள்ளப் படும்.
மூன்றன் முதனிலை நீடலு முரித்தே உழக்கென் கிளவி வழக்கத் தான. (தொல்.457)
இஃது எய்தியது விலக்கிற்று.
(இ-ள்) உழக்கென்னுஞ் சொல் வருமொழியாய் வரும் வழக்கிடத்து நிலைமொழியாகிய மூன்றென்னும் எண்ணுப் பெயரின் முதனிலை நீண்டு முடிதலுமுரித்து எறு.
(உ-ம்) மூவுழக்கு எனவரும். வழக்கத்தான என்றதனால் அகல் என்பது வருமொழியாய் வருமிடத்தும் மூவகல் என இச்செய்கை பெறுதல் கொள்க. மூன்று+உழக்கு = மூழக்கு, மூன்று ஆழாக்கு = மூழாக்கு என்னும் மரூஉ முடிபு இவ்வியலின் புறனடையாற் கொள்ளப்படும்.
ஆறென் கிளவி முதல்நீ டும்மே. (தொல்,458)
இதுவும் அது.