பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்னூற் சிறப்புப்பாயிரம்

15

நன்னூற் சிறப்புப்பாயிரம்

மலர்தலை யுலகின் மல்கிருள் அகல இலகொளி பரப்பி யாவையும் விளக்கும் பருதியின் ஒருதா னாகி முதலி றொப்பள வாசை முனிவிகந் துயர்ந்த அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின் மனவிருள் இரிய மாண்பொருள் முழுவதும் முனிவர் அருளிய மூவறு மொழியுளும் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள் அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத் தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார் இகலற நூறி இருநில முழுவதும் தனதெனக் கோலித் தன்மத வாரணம் திசைதொறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க் கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோற் சீய கங்கன் அருங்கலை விநோதன் அமரா பரணன் மொழிந்தன னாக, முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன் பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னு நாமத் திருந்தவத் தோனே.

இதன் பொருள் ; பரந்த இடத்தையுடைய பூமியின்கண் செறிந்த இருள் நீங்க, விளங்காநின்ற கதிரை விரித்து நிலம் நீர் முதலாகிய எல்லாப் பொருள்களையும் விளங்கக் காட்டும் சூரியனைப் போல, உலகியற்கெல்லாம் தான் ஒருவனேயாகி, பிறப்பும் இறப்பும் உவமையும் அளவும் விருப்பும் வெறுப்பும் ஆகிய அவற்றை இயல்பாகவே நீங்கி நிற்றலால் உயர்ந்த ஞானமே திருமேனியாகவுடைய இறைவன், தனது விரிந்த கருணையாகிய தன்மையினாலே, உயிர்களின் மனத்திருளாகிய அறியாமைகெட, மாட்சிமைப்பட்ட அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள் நான்கினையும் விருப்புடன் அருளிச்செய்த பதினெண்ணிலத்து மொழிகளுள்ளும் கிழக்கே கடலும், தெற்கே குமரித்துறையும், மேற்கே குடநாடும், வடக்கே வேங்கடமும் ஆகிய இந்நான்கெல்லையினையுமுடைய நிலத்தில் வழங்கும் மொழியாகிய பெரிய தமிழென்னும்