பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

தொல்காப்பியம்-நன்னூல்



   (உ-ம்) அறாயிரம் எனவரும்.
   முன்னர் நெடுமுதல் குறுகும் (எழுத்து 440) என்ற விதிப் படி ஆறு அறு எனத் திரிந்து நிற்கின்ற முற்றுகரத்தையே ஈண்டு ஆறன் மருங்கிற் குற்றியலுகரம் என்றார் ஆசிரியர். இங்ஙனம் கூறியது திரிந்ததன் . திரிபு அதுவென்னுங் கருத்தினாலென்பர் உரையாசிரியர். எனவே ஈண்டுக் கெடுமெனச் சொல்லப்பட்டது அது என்பதன்கண் முற்றியலுகரமே யென்பதும் ஆறு என்பத னிற்றுக் குற்றியலுகரமாயின் அது மெய்யிறு போலக் கெடாது நின்று உயிரேற இடங்கொடுக்கு மென்பதும் புலனாம். இது புணரியலில் குற்றியலுகரமும் அற்றென மொழிப’ என்னுஞ் சூத்திரவுரையில் விளக்கப் பெற்றமை நோக்கத்தக்கதாகும்.
       ஒன்பா னிறுதி உருபுநிலை திரியா 
       தின்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே.     (தொல்.470)

இதுவும் அது.

   (இ-ள்) ஒன்பதென்னும் எண்ணினிறுதிக் குற்றுகரம் தன் வடிவு கெடாது இன்சாரியை பெற்று முடிதல் வேண்டும் (எ-று)
   (உ-ம்) ஒன்பதினாயிரம் எனவரும்.
       நூறா யிரமுன் வரூஉங் காலை 
       நூற னியற்கை முதனிலைக் கிளவி.     (தொல்.471) 

இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு நூறென்னுமெண் அடையடுத்த ஆயிரம் முடியுமாறு கூறுகின்றது.

   (இ-ள்) நூறாயிரமென்னும் அடையடுத்த மொழி ஒன்று முதல் ஒன்பான்கள் முன் வருமொழியாய் வருங்காலத்து ஒன்றென்னு முதனிலைக்கிளவி நூறென்னு மெண்ணோடு புணர்ந்தாற் போல விகாரமெய்தி முடியும். எ-று.
   (உ-ம்) ஒரு நூறாயிரம் எனவரும்.
       நூறென் கிளவி ஒன்றுமுத லொன்பாற்கு 
       ஈறுசினை யொழிய இனவொற்று மிகுமே.      (தொல்.472) 

இது நூறென்பதனோடு ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது.

   (இ-ள்) நூறென்னு மெண்ணுப் பெயர் ஒன்றுமுதலொன் பான்களோடு புணருமிடத்து ஈறாகி நின்ற குற்றுகரம் தன்னாற் பற்றப் பட்ட மெய்யோடுங் கெடாது நிற்ப அச்சினைக்கு இனமாகிய றகரவொற்று மிக்கு முடியும் எ-று.