உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

தொல்காப்பியம்-நன்னூல்



   (இ-ள்) ஒன்று முதலெட்டீறாகப் பத்தென்னுமெண் ஏறி ஒரு சொல்லாகி நின்ற ஒரு பஃது முதலிய எண்ணுப் பெயர்கள், ஒன்று முதலாகிய ஒன்பதெண்கள் வருமொழியாய் வருமிடத்துப் பஃது என்பதன் ஆய்தங்கெட்டு ஆண்டு இனவொற்றாகிய ஒரு தகரவொற்று இடையிலே மிக்கு முடியும் எ-று.
   (உ-ம்) ஒருபத்தொன்று, இருபத்தொன்று, என எல்லா வற்றோடும் வரும். -

இதனை நன்னூலார்,

       ஒருபஃ தாதிமுன் னொன்றுமுத லொன்பான் 
       எண்ணும் அவையூர் பிறவு மெய்தின் 
       ஆய்த மழியவாண் டாகுந் தவ்வே.                 (நன்.195)

என்ற சூத்திரத்தாற் கூறினார்.

       ஆயிரம் வரினே இன்னென் சாரியை  
       ஆவயி னொற்றிடை மிகுத லில்லை.                (தொல்,476)
   (இ-ள்) ஒருபஃது முதலியன ஆயிரத்தோடு புணருமிடத்து இன்சாரியைபெறும். அவ்விடத்துத் தகரவொற்று இடை வந்து மிகாது எ-று.
   (உ-ம்) ஒருபதினாயிரம், இருபதினாயிரம், எண்பதினா யிரம் எனவரும்.
       அளவும் நிறையும் ஆயியல் திரியா.        (தொல்.477)
   இஃது ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணருமாறு கூறுகின்றது.
   (இ-ள்) ஒருபஃது முதலிய எண்களின் முன்னர் அளவுப் பெயரும் நிறைப்பெயரும் வந்தால் ஒற்று இடை மிகாது இன்சாரியை ப்ெற்று முடியும் எறு.
   (உ-ம்) ஒருபதின்கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல் உழக்கு எனவும், கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்.
   ‘திரியா என்றதனால் ஒருபதிற்றுக்கலம், இருபதிற்றுக்கலம் என்னும் முடிபிற்கு இன்னின் னகரம் இரட்டிய றகரமாதலும், ஒருபதினாழி என்னும் முடியின்கண் வருமொழி நகரம் திரிந்தவழி நிலைமொழியின் னவரக்கேடும்கொள்க என்பர் இளம்பூரணர். இன்னின் னகரம் றகரமாய் இரட்டித்த நிலையில்