உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தொல்காப்பியம்-நன்னூல்

கடலிலுள்ள எழுத்துச் சொற் பொருள் யாப்பு அணி என்னும் அருமை வாய்ந்த பொருள்கள் ஐந்தினையும் எல்லோரும் உணரும்படி தொகுத்தும் விரித்தும் இருதிறமும் பொருந்தத் தொகை விரியாக்கியும் விளங்கச் சொல்லுக என, பகைவரது பகைமை கெட அவரைத் துணித்துப் பெரிய நிலம் முழுவதையும் தன்னுடையதாகப் பற்றிக்கொண்டு தன் மதயானைகளை எட்டுத் திசையிலும் திசைக்களிறுகள்போல் நிறுத்திய, தொன்றுதொட்டு நிலைபெற்று வரும் புகழினையும் (பகைவரை வென்று கட்டிய) பெருமைவாய்ந்த வீரக் கழலினையும் குடிகளின் கலிவெம்மை துரந்து நிழல்செய்யும்) வெண்கொற்றக் குடையினையும் கைம்மாறு கருதாது மழைபோல் உதவும் வண்மை வாய்ந்த கையினையும் எக்காலத்தும் வளையாத செங்கோலினையும் உடைய சிங்கம்போல்வானாகிய கங்கன் என்பான், அரிய நூல்களை ஆராய்தலே பொழுது போக்காக உடையான், தன் மார்பகத்து விழுப்புண்படப் போர் செய்தலையே தனக்கு ஆபரணமாகக் கொண்டவன் கேட்டுக் கொண்டானாக, (அவனது வேண்டு கோட் கிணங்கித் தொல்லாசிரியர்கள் இயற்றிய நூலின் வழியே நன்னூல் என்னும் பெயரினால் இந்நூலைச் செய்தான்; (அவன் யாவனெனின் பொன்மதிலாற். சூழப்பெற்ற சனகாபுரத்துள் இருக்கும் சொல்லுதற்கு அரிய ஞான ஒழுக்கச் சிறப்பினையும் பவணந்தியென்னும் பெயரினையும் உடைய பெரிய தவத்தினையுடையோன் என்பதாம்.

 இதனுள், பவணந்தி என ஆக்கியோன் பெயரும், முன்னோர் நூலின் வழியென வழியும், நான்கெல்லையின் என எல்லையும் நன்னூல் என நூற்பெயரும், தொகைவகை விரியின் என நூல்யாப்பும், அரும் பொருள் ஐந்து என நுதலிய பொருளும், சீயகங்கன் தருக என மொழிந்தனன் எனக் கேட்போரும், மாண்பொருள் முழுவதும் எனப்பயனும், சீயகங்கன் எனவே அவன் காலத்து இயற்றப்பெற்று அவனது அவைக்களத்திலே அரங்கேறியது எனக் காலமும் களமும், “யாவரும் உணர எனக் காரணமும் உணர்த்தியவாறு காண்க.