இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
254
தொல்காப்பியம்-நன்னூல்
தனது தொழிலைச் சொல்ல வரும் ஆகாரவீற்று வினா வினை யுடைய வினைச்சொல்லும், யாவென்னும் வினாப் பெயரும், விளித்தலையுடைய பெயராகிய ஆகாரவீற்று உயர் திணைச் சொல்லும் வல்லெழுத்து முதலிய வந்து புணருங்கால் இயல்பாய் முடிவன என ஆவுமாவும் விளிப்பெயர்க் கிளவியும்’ எனவரும் 224-ஆம் சூத்திரத்திற் குறித்தார் தொல்காப்பியனார். இதனை,
ஈற்றியா வினாவிளிப் பெயர்முன் வலியியல்பே. (நன்.160)
என்னும் சூத்திரத்தாற் பவணந்தி முனிவர் குறித்துள்ளார்.
இல்லாமை என்னும் குறிப்புணர்த்தும் “இலம்” என்னும் உரிச்சொற்குமுன் உண்டாதல் என்னும் பொருளுடைய படு’ என்னும் சொல் வருமொழியாய் வருங்காலத்துச் செய்யுளிடத்து மகரக்கேடும் திரிபுமின்றி இலம்படு என இயல்பாய் நிற்கும். இதனை யுணர்த்துவது,
இலமென் கிளவிக்குப் படுவரு காலை நிலையலு முரித்தே செய்யு ளான. (தொல்.316)
என்ற நூற்பா. இதனை இந்நூலின் 246-ஆம் பக்கத்துச் சேர்க்க.
மக்கள் என்னும் பெயர்ச்சொல்லிறுதி ளகரம் இயல்பாதலேயன்றித் தக்க இடம் அறிந்து வல்லொற்றாகத் திரிந்து மக்கட்கை, செவி, தலை, புறம் எனவருதலும் உரித்தெனக் கூறுவது,
மக்க ளென்னும் பெயர்ச்சொ லிறுதி தக்கவழி யறிந்து வலித்தலு முரித்தே. (தொல்.404)
என்ற நூற்பாவாகும். இதனை 253-ஆம் பக்கத்தில் திரிந்து முடியும் ஈறுகள் என்ற தலைப்பின் கீழ்ச் சேர்க்க
அவ், இவ், உவ் என்னும் வகர வீற்றுச் சுட்டுப்பெயர்களின் வகரம் அல்வழிக்கண் வல்லெழுத்து முதன்மொழிவரின் (அவ்+கடிய=அஃகடிய என்றாங்கு ஆய்தமாகத் திரிந்து வரும் என்பதனை யுணர்த்தும்,
வேற்றுமை யல்வழி யாய்த மாகும். (தொல்.379)
என்ற சூத்திரத்தையும், வகரவீற்றுச் சுட்டின் திரிபுணர்த்திய,
மெல்லெழுத் தியையின் அவ்வெழுத் தாகும். (தொல்,380)
என்ற சூத்திரத்தையும் 256-ஆம் பக்கத்திற் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.