உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியம் – நன்னூல்

எழுத்ததிகாரம்

எழுத்ததிகாரம் என்பது எழுத்தினது அதிகாரத்தை யுடையதென அன்மொழித் தொகையாய் அப்படலத்திற்குக் காரணப்பெயராயிற்று. எழுத்தாவது கட்புலனாகா உருவுங் கட்புலனாகிய வடிவுமுடைத்தாக வேறு வேறு வகுத்துக் கொண்டு தன்னையே யுணர்த்தியுஞ் சொற்கு இயைந்தும் நிற்கும் ஒசையாம். ஈண்டு எழுத்தென்றது அகரமுதல் னகரவிறுவாய்க் கிடந்த முப்பதும் குற்றியலிகரம் முதலிய மூன்றுமாம். இவற்றிற்கு எழுத்தென்னும் பெயர் “எழுத்தெனப்படுப” என்ற சூத்திரத்தால் எடுத்தாளப்பட்டது. இவ்வெழுத்தென்னும் பெயர் முதன் முதல் மக்கள் மொழிகளைத் தோற்றி வழங்கிவருங்காலத்து அவர்கள் தம் கருத்தைப் பிறருக்குப் பேச்சு முறையால் உணர்த்தாமல் தரையிலும், ஒலை முதலியவற்றிலும் அவ்வொலிகளை எழுதிக் காட்டத்தொடங்கிய காலத்துப் பெற்ற காரணப் பெயராதல் வேண்டுமென்பது “எழுதப்படுதலினெழுத்தே” எனவரும் பழைய சூத்திரத்தொடராற் புலனாம்.

ஆசிரியர் தொல்காப்பியனார் தாம் கூற எடுத்துக் கொண்ட எழுத்திலக்கணத்தினை எட்டு வகையானும் எட்டிறந்த பலவகையானும் உணர்த்தினார் என்பர் இளம்பூரணர். எட்டுவகையாவன. எழுத்து இனைத்தென்றல், இன்ன பெயர் என்றல், இன்ன முறைமைய என்றல், இன்ன அளவின என்றல், இன்ன பிறப்பின என்றல், இன்ன புணர்ச்சிய என்றல், இன்னவடிவின என்றல், இன்ன தன்மைய என்றல். இவற்றுள் எழுத்தின் தன்மையும் வடிவும் ஆசிரியர் தாம் உணர்ந்தாராயினும் பலபட விரித்துணர்த்த லருமையின் தன்மையும் வடிவும் நீங்கலாக ஏனைய ஆறும்ே இந்நூலில் விளங்கக் கூறியுள்ளார்.

இனி எட்டிறந்த பலவகையாவன: எழுத்தின் உண்மைத் தன்மை, குறைவு, கூட்டம், பிரிவு, மயக்கம், மொழியாக்கம், நிலை, இனம், ஒன்று பலவாதல், திரிந்ததன்திரிபு அது என்றல், பிறிதென்றல், அதுவும் பிறிது மென்றல், நிலையிற்றென்றல்,