இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
269
இவர் இயற்றிய பன்னிரு திருமுறை வரலாறு இரண்டாம் பகுதிக்கு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் முதல் பரிசு வழங்கியது. (7.4.73) 1976ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சொருணாம்பாள் நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்துதல். பொருள்: ‘சிவஞான முனிவர்’ -
1977ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர், இந்திய மொழிப்புல முதன்மையர் பதவி உயர்வு. 1979 வரை இப்பதவியில் இருந்தார். (ஓய்வு பெற்ற பின்பும்).
1979ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சிறப்பு நிலைப் பேராசிரியராக அமர்த்தப்படுதல். இப்பதவியில் இருந்தபோதுதான் தொல்காப்பியம் பொருளதிகாரம் உரைவளப்பதிப்புகளை எழுதினார். 1982 வரையில் இங்கு பணிபுரிந்தார்.
இவரின் இசைத் தமிழ் நூலை இராமகிருஷ்ணா வித்தியாசாலை நிர்வாகக்குழு வெளியிட்டது.
1981ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப் பட்டது. முதல் துணைவேந்தராக வ.அய். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். க. வெள்ளைவாரணனாரின் புலமையை நன்கு அறிந்தவர். அதனால் அவரை, தமிழ்ப் பல்கலையில் வந்து பணியாற்றும்படி அழைப்பு விடுத்தார்.
1982ஆம் ஆண்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியத் துறையில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றினார். துறைத்தலைவராகவும், நிகழ்நிலைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அங்கு சங்க இலக்கியப் பொருளடைவு என்ற தொகுதிகள் இவர் பொறுப்பில் முதலில் உருவாயின. சைவ சித்தாந்த சாத்திர வரலாறு என்ற நூலையும் எழுதினார்.
‘திருவுந்தியார் திருக்களிற்றுப் படியார் - விளக்கவுரை’ என்ற நூல் காசியில் நடைபெற்ற சைவ சித்தாந்த மகாசமாசத்தின் 76ஆம் ஆண்டு விழாவில் திருப்பனந்தாள் பூர் காசிமடத்தால் வெளியிடப்பட்டுள்ளது.