உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

தொல்காப்பியம்-நன்னூல்


யின் இவை நூன்மரபு பற்றிய பெயராயின என அறிக” என இவ்வோத்தின் பெயர் இயைபு உரைத்தார்.

  இவ்வோத்திற் கூறப்படும் எழுத்துக்களின் பெயர் முதலிய அனைத்தும் தொல்காப்பியனார்க்கு முற்காலத்தவரான பண்டைத் தமிழ்ச்சான்றோர் நூல்களிற் சொல்லப்பட்ட எழுத்தியல் மரபுகளாய் ஆசிரியர் தந்நூலின் ஆளுதற்பொருட்டு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது, இவ்வோத்தின் இலக்கணங்களை என்ப; புலவர் மொழிப; என்மனார் புலவர்’ என்ற சொற்களான் முன்னையோர் கருத்தாக ஆசிரியர் கூறுதலான் விளங்கும்.

எழுத்தெனப்படுப
அகரமுதல் னகரவிறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே. (தொல். 1)

இஃது எழுத்துக்களின் பெயரும், முறையும் தொகையும் கூறுகின்றது.

  (இதன் பொருள்) எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன அகரமுதல் னகர மீறாகக் கிடந்த முப்பதென்று சொல்லுவர் ஆசிரியர்; சார்ந்து வருதலைத் தமக்கு இலக்கணமாகவுடைய மூன்றுமல்லாத விடத்து என்பதாம்.
  சார்ந்து வருதலைத் தமக்கு இலக்கணமாகவுடைய மூன்றும் சொல்லிடை நோக்க எழுத்தாமாயினும், தனியே நிற்கும் ஆற்றல் பெற்றன அல்லவாதலின், தம்மியல் குன்றாவாறு தனியே நிற்றல் காரணமாக எழுத்தெனச் சிறப்பித்துச் சொல்லப்படும் முப்பதனோடும் சேர்த்துரைக்கப் பெறாவாயின. சார்பெழுத்தின் இயல்புணர்த்துவார், “சார்ந்துவரன் மரபின் மூன்று” என்றார்; யாதாயினும் ஒன்றினைச் சார்ந்து வருதலையே தமக்குரிய இயல்பாகவுடைய மூன்று மென்றவாறு. எனவே இம்மூன்றும் ஏனையெழுத்துக்களைப்போன்று தனியே எடுத்துரைக்கப்படா நிலைமைய என்பது போதரும். இவ்வாறே நன்னூலாரும், 

மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே. (நன். 58)

என்பதனால் மொழிக்கு முதற்காரணமாய் அணுத்திரளின் காரியமாய வரும் ஒலியாவது எழுத்து, அது முதலெழுத்தென்றும்