உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு

37


"குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே” (மொழிமரபு 5)

என்ற சூத்திரத்தால் விளக்கப்பட்டது. வடமொழி விசர்க்கமோ உயிரோசை யல்லது ஒலியாவியல்பிற்றாய் உயிரையடுத்து அவற்றிற் கேற்ற உயிரோசைத்தாய் நின்று மேற்கூறிய நியதியின்றி இறுதிக் கண்ணும் நின்றொலிக்கு மியல்புடையது. தமிழ்ச் சார்பெழுத் தாகிய ஆய்தம் குற்றெழுத்தின் பின்னதாய் வல்லினமெய்யின் முன்னின்று அதன் ஓசையை மென்மைப் படுத்தி நுணுகிய ஓசைத்தாய் நிற்றலும், வடமொழியில் விசர்க்கம் பெரும்பான்மையும் மெய்முன் னில்லாது உயிரையடுத்து அதன் ஒசைத்தாய் ஒலித்தலும் கடைசியில் க ப மெய்யின்மேல் நின்றும் பிறவற்றின் முன் அவ்வோசை யிற்றிரிந்தும் ஒலித்தலும் இவ்விரண்டிற்குமுள்ள வேற்றுமை யாதலால் ஒலியாலிரண்டும் ஒத்தன என்றல் செவி கருவியாக ஒசையை துணித்துனரும் துண்ணுணர்வினார்க்கு உடன் பாடன்றென்க.

 இதுகாறும் கூறியவாற்றால் ஆய்தம் என்னும் பெயர் ஆஸ்ரதம் அல்லது ஆயதம்’ என்றவற்றின் திரிபன்று என்பதும், வடமொழி விசர்க்கத்திற்கும் இதற்கும் வடிவானும் இயல்பானும் ஒலியானும் நிலையானும் வேறுபாடு மிகுதியுமுளவென்பதும் விளக்கப்பட்டன. இதனால் ஆய்தமென்ற எழுத்தொலி தமிழிற்கே யுரிய சிறப்பொலி என்பதும் விளக்கப்பட்டது. ஆய்தத்தை ‘ஹ’ எழுத்தொலியாகத் தவறாகக் கருதுவா ருளரெனினும் அது மெய்யீறாய் மொழிமுதனின்று உயிரேறி நிற்குமியல் பறிந்து மயக்கம் நீங்குவாராக.
 ஆய்தம் என்ற பெயர் தமிழாயின் அதன் பெயர்க் காரணமென்னவெனின், மொழிகளெலாம் காரணமுடையவா யினும் அதன் காரணம் வெளிப்படத் தோன்றா என்றார் ஆசிரியர். “ஒய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவயினான்கும் உள்ளதன் நுணுக்கம் என்றாராகலின் இச்சொல் ஆய்தல் என்ற உரிச்சொல்லடியாகப் பிறந்து ஆய்தமென்றாகி நுணுகிய ஓசையுடைய எழுத்தென்ற பொருளில் வழங்கியிருத்தல் கூடும் என உய்த்துணரலாம்.
 இங்ஙனம் தொல்காப்பியனார் சார்ந்துவரும் எழுத்து மூன்றென்றாராக, பவணந்தியார் தம் நூலுள் தொல்லாசிரிய