உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

, 35

 சார்ந்து வருதலின்றித் தனியேவரும் அகரமுதல் னகர விறுதியாகவுள்ள முப்பதெழுத்தின் தொகையினை முதற் சூத்திரத்துக்கூறி, 2-ல் சார்பெழுத்தின் பெயரும் முறையுங் கூறிய ஆசிரியர், 3, 4-ல் குற்றெழுத்திவை யெனவும் நெட்டெழுத் திவையெனவும் அவற்றின் மாத்திரை யில்வளவெனவுங் கூறிப்போந்து, 5-ல் ஓரெழுத்தின் மாத்திரை வரையறையையும், 6-ல் ஓசை குறைந்தால் அதனை நீட்டி நிறைவிக்கும் முறையினை யும் உணர்த்தி, இச் சூத்திரத்தால் அம்மாத்திரையிலக்கணமும் கூறிப் போந்தார்.
 இச்சூத்திரத்து வரும் என என்பது எண்ணிற் பிரிந்து கண்ணிமையென நொடியென என்று இரண்டிடத்துங் கூடிற்று. அவ்வே என்பதன் ஏகாரம், அளவு கருவிகள் எல்லாவற்றுள்ளும் இவையே ஒரு மாத்திரை யியல்பினை விளங்க உணர்த்துவன எனப் பிரிநிலை குறித்தது.
 இவ்வாறே நன்னூலாரும் எழுத்தொலி யெழுச்சி பலவற்றையும் அளந்து கோடற்குரிய கால அளவினை,
  இயல்பெழு மாந்த ரிமை நொடி மாத்திரை. (நன். 100)

என்பதனால் விளங்க உரைத்தார். இயல்பாக எழும் மாந்தரது இமைப்பொழுதும் நொடிப்பொழுதும் ஒரு மாத்திரைக்கு அளவாகும் என்பது இதன் பொருள்.

  இமைத்தற்றொழிலும் நொடியோசையுமாகிய இவை யிரண்டும் ஆகுபெயராய்க் காலத்தை யுணர்த்தி நின்றன என்பர் சங்கர நமச்சிவாய்ப் புலவர். எனவே இவை நொடி என்பன வற்றிற்கு இமைப்பொழுதும் நொடிப்பொழுதும் எனப் பொருள் கொண்டு அப்பொழுதினை மாத்திரைக்கு அளவாக்கி யுரைப்பதே பொருந்துவதாம்.
    ஒளகார விறுவாய்ப் 
    பன்னி ரெழுத்தும் உயிரென மொழிப. (தொல். 8)

இது முன் எடுத்துக் காட்டப்பட்ட குற்றெழுத்து நெட்டெழுத் தாகியவற்றைத் தொகுத்து வேறோர் குறியிடுகின்றது. -

  (இ-ள்) அகர முதலாக ஒளகார மீறாகக் கிடந்த பன்னி ரெண்டெழுத்தும் உயிரென்னும் பெயரினையுடைய வென்று கூறுவர் எ-று.