பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தொல்காப்பியம்-நன்னூல்



பொருந்துந் தனிச்சிறப்பு உயிர்க்கே உரித்தாதல் கருதியென்க. இங்ஙனம் மெய்யும் உயிரும் கூடிய நிலையினதாகிய உயிர்மெய் யெழுத்துக்கள், மெய்யினளபும் உயிரளபும் பெற்று ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையுமாக நிற்கவேண்டியன, ஒரு மாத்திரையாயும் இரண்டு மாத்திரையாயும் ஒலித்து நிற்றற்குரிய காரணங்கூறப் புகுந்த நச்சினார்க்கினியர், “ஆயின் ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையுமுடையன ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னை யெனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய், அரைநாழி யுப்பிற் கலந்துழியும் கூடி ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வதோர் பொருட்பெற்றியென்று கொள்வதல்லது காரணங் கூறலாகாமை யுனர்க என்று கூறினார். ஒருநாழி நீரிலே அரைநாழி உப்பைக் கலந்தால் அஃது ஒன்றரை நாழியாய் மிகாதவாறுபோல் வதோர் பொருட் பெற்றியை உயிர்மெய்யளவிற்கு உவமை கூறிப்போந்த இதன்கண், நாழி நீரிற் கலக்கப்பட்ட அரைநாழியுப்பு நீரோடு கலந்து ஒன்றரை நாழியாய் மிகாது ஒரு நாழியளவுட்படுமாயினும் அவ்வரை நாழியுப்பின் பருமை, ஒருநாழி நீரிற் கலந்து, முன் அவ்வளவு நிறையில்லாத நீர், முன்னிலும் நிறையினாற் பெருகுதல்போல, மெய்யின் மாத்திரை உயிரளவிற்பட்டு அடங்கினும், அக்கூட்டத்துப் பொருட்பெற்றியால் மெய்யினது ஒசையும் எண்ணும் அதனோடு ஒன்றுபட்டு அழியாது நிற்கு மென்பது கொள்ளக்கிடக்கின்றது. உலகத்து உயிர்களின் உடம்பானது உயிர்வழியா யடங்கி அதன் விரிவு பெற்று நிற்றல்போல, இம்மெய்யெழுத்தும் உயிரெழுத்தளவிற்றாய் அடங்கி அதன் ஒலியோடு ஒத்தொலிக்குமென்பது, உயிர்மெய் என்ற நிறையுவமப் பெயரால் நன்கு விளங்கும்.

மெய்யி னளயே அரையென மொழிப. (தொல். 11)

இது தனி மெய்க்கு அளபு (மாத்திரை) கூறுகின்றது.

(இ-ள்) மெய்யினது அளபு அரைமாத்திரையெனச் சொல்லுவர் புலவர் எறு.

ஈண்டு அரையெனக்கூறியது முன்னர்க் கண்ணிமை கைந்நொடி யளவாகக் கூறப்பட்ட ஓரளபிற் பாதியினையே. நாச் சிறிது புடைபெயருந்தன்மையாய் நிற்றலின் அவ்வரை

மாத்திரையுந் தனித்துக் கூறிக்காட்டலாகாது என்பர் நச்சினார்க்கினியர்.