பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தொல்காப்பியம்-நன்னூல்



உயிரியல் திரியா” என்பதனால், உயிர்மெய்க் கூட்டத்துத் திரியா உயிரியல்பினை விளக்கிய ஆசிரியர், அக்கூட்டத்து மெய்கள் உயிரொலி நிறையப்பெற்று அதனோடு அதன் அளவாய் அதன்முன் ஒலிக்குமியல்பின என்பதனை இச்சூத்திரத்தால் தெளிவாகக் குறித்துள்ளார்.

    மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே. (தொல், 18 )
   உயிரும் மெய்யும் கலந்து உயிரளவாய் ஒலிக்கும் பொழுது அவ்விரண்டனுள் முன்னொலிப்பதெது பின்னொலிப்பதெது என்பதனை இதனுட் கூறுகின்றார்.
  இ-ள்) மெய்யும் உயிருங் கலந்து உயிரளவாய் ஒலிக்கும் பொழுது மெய்யொலியின் பின்னரே உயிரொலி தோன்றி நிற்குமென்பதாம்.
  இதனால் உயிர்மெய்க் கூட்டத்து மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஒலித்து நிற்றல் கூறப்பட்டது.
  இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனார் வேற்றுமை நயங்கருதி உயிர்மெய்யிலக்கணங் கூறினாராக, நன்னூலாசிரியர் பவணந்தியார், உயிர்மெய்யை ஒற்றுமைநயங்கருதி ஒரெழுத் தாகக் கொண்டு இலக்கணங் கூறுவர்.
   புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும்
   ஏனை யுயிரோ டுருவு திரிந்தும் 
   உயிரள வாயதன் வடிவொழித் திருவயிற் 
   பெயரொடு மொற்றுமுன் னாய்வரும் உயிர்மெய். (நன். 89)
 “மெய் புள்ளியை விட்டு அகரத்தோடு கூடியவழி விட்டவுருவே உருவாகியும், ஒழிந்த உயிர்களோடு கூடியவழி உருவு வேறுபட்டும், தன்மாத்திரை தோன்றாது உயிர் மாத்திரையே மாத்திரையாய், அதன் வரிவடிவினது விகார வடிவே வடிவாய் உயிர்வடிவை யொழித்து, மெய்யுயிரென்னும் இரண்டிடத்தும் பிறந்த உயிர்மெய் யென்னும் பெயருடனே, ஒற்றொலி முன்னும் உயிரொலி பின்னுமாய் வரும் உயிர் மெய்யெழுத்து” என்பது இதன் பொருள். இதன்கண் உயிர் மெய்யை ஒரெழுத்தெனக் கொண்டு விதி கூறுவதும் அதனைச் சார்பிற்றோற்றத்து ஒரெழுத்தென அடக்கியுரைப்பதும் உயிர்மெய்யை ஓரெழுத்தாகக் கொண்டனர் பவணந்தியார் என்பதனை வலியுறுத்தும். இவரே பின்னர் எழுத்துக்களின் முதலீறுரைக்கப் போந்தவிடத்து,