பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தொல்காப்பியம்-நன்னூல்



   (இ-ள்) மேற்கூறியவாறு மூன்று கூறாகப் பகுக்கப்பட்ட பதினெட்டு மெய்களும் தம்மை மொழிப்படுத்து வழங்குமியல் புளதாகுமிடத்து மெய்மயக்கென்றும் உடனிலையென்றும் இருவகையாம் ஆராயுமிடத்து எ-று.
   ‘உயிர், மெய், உயிர்மெய், என்னும் மூன்றினையும் உறழ்ச்சிவகையான் உறழ ஒன்பது உளவாமன்றே அவற்றுள் தனிமெய்யோடு தனிமெய் மயக்கம் ஒன்றே கூறியது என்னெனில், மற்றவற்றிற்கு வரையறையின்மையின் வரையறை யுடைய தனிமெய் மயக்கமேகூறி யொழிந்தாரென வுணர்க. மெய் யென்றதனால் தனிமெய்யோடு உயிர்மெய் மயக்கமன்றி தனி மெய்யோடு தனிமெய் மயக்கமாதல் கொள்க’ என்பர் இளம் பூரணர்.
   உடனிலையை உடனிலை மயக்கமெனக் கூறுவர் இளம்பூரணர். “மெய்ம்மயக்குடனிலை” என்ற இவர்பாடத்தை விடுத்து நச்சினார்க்கினியர் “மெய்ம்மயங்குடனிலை” எனப்பாடங் கொண்டு மெய்மயங்கும் நிலை, உடன் மயங்கும் நிலை என ஈரிடத்தும் மயங்குநிலை என்ற சொற்களைக்கூட்டி “மெய் மயங்கு நிலை = தனிமெய் தன்முன்னர் நின்ற பிறமெய்யோடும் தன் மெய்யோடும் மயங்குநிலையும், உடன் மயங்குநிலை = அப்பதினெட்டும் உயிருடனே நின்று தன் முன்னர் நின்ற உயிர்மெய்யோடும் தனிமெய்யோடும் மயங்கும் நிலையும் என இரண்டாம்” எனப் பொருள்கூறி இச்சூத்திரம் தனிமெய் பிறமெய்யோடும் தன் மெய்யோடும் மயங்கும் மயக்கமும், உயிர்மெய் உயிர்மெய்யோடும் தனிமெய்யோடும் மயங்கும் மயக்கமும் கூறுகின்றது எனக் கருத்துரைப்பர். இவர்க்கு முன்னவராய இளம்பூரணர் கொண்ட “மெய்மயக்குடனிலை” என்ற பாடமே தொன்மை கருதி ஏற்றுக் கொள்ளப்படுவதாக லானும், உயிர்மெய், உயிர்மெய்யோடும் தனி மெய்யோடும் மயங்கும் மயக்கத்திற்கு வரையறையின்மையின் அதற்கு விதி கூறப்படுவதன்றாகலானும் அவர் கூறியவாறு மெய்ம்மயங்கு நிலை என்பதனுள் மெய் பிறமெய்யோடும் தன்மெய்யோடும் கலந்து நிற்குநிலை என்பது விளங்காமை யானும், உயிர்மெய்யை உயிரும் மெய்யும் என ஈரெழுத்தாகப் பிரித்து விதி கூறுவார் ஈண்டு ஓரெழுத்தாகக் கொண்டு உரையாராகாலனும், உடனிலையென்பதற்கு உயிருடன் நிற்றல் எனக் கோடற்குரிய சொல்லின்மையானும் இளம்பூரணர் பாடமே ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும்.