உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தொல்காப்பியம்-நன்னூல்



  அ, இ, உ, அம்மூன்றுஞ் சுட்டு. (தொல். 31)

இது குற்றெழுத்தென்றவற்றுள் சிலவற்றிற்கு வேறோர் குறியீடு கூறுகின்றது.

  (இ-ள்) அ, இ, உ, என்று கூறிய அம்மூன்றுஞ் சுட்டென்னுங் குறியினையுடைய (எ-று).
 இதுவும் இதற்கடுத்த சூத்திரமும் எழுத்தாம் தன்மையின்றி மொழிநிலைமைப்பட்டு நிற்றலின் மொழி மரபினைச்சார வைத்தார் என்பர் உரைகாரர்.
 சுட்டியறியப்படும் பொருளை யுணர்த்தலின் சுட்டென்பது காரணப்பெயர்.
 அக்கொற்றன், இக்கொற்றன் உக்கொற்றன் எனவரும் அ, இ, உ என்ற மூன்றெழுத்தும் மொழி முதலிலே தனியே நின்று சுட்டுப்பொருளை யுணர்த்தி நிற்றல் மேற்காட்டிய உதாரணங்களாற் புலனாம். ஆசிரியர் தனியே சுட்டு என்ற பெயரைக் குறிப்பிடும்போதெல்லாம் இம்மூன்றெழுத்தைத் தவிர வேறொன்றையுஞ் சுட்டாமையும் இதனை வலியுறுத்தும்.
 இவ்வாறு நன்னூலாரும் அ, இ, உ, இம் மூன்றெழுத்தும் மொழிமுதற்கண் புறத்தே தனித்துச் சுட்டுப் பொருளுணர்த்த வரிற் சுட்டெழுத்தாமென்பதனை,
   அ இ, உ ம்முதற் றனிவரிற் சுட்டே. (நன். 66) 

என்பதனாற் குறிப்பிட்டார்.

 இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனாரும், உரைகாரரும், பவணந்தியாரும், மயிலைநாதரும் மொழிக்கு முதலில் தனித்துச் சுட்டுப் பொருளுணர்த்திவரும் அ, இ, உ, என்ற இம் மூன்றனையுமே ஈண்டுச் சுட்டெனப் பெயர் கூறினாராகப் பின் வந்த நன்னூலுரையாசிரியர் சங்கர நமச்சிவாயர் “முதலெனப் பொதுப்படக் கூறினமையாற் புறத்தும் அகத்தும் வருதல் பெற்றாம்” எனக்கொண்டு, ஆசிரியர் கூறிய தனிவரின் என்றதனையும் நோக்காது, “அவன் என்பதன்கண் அகரம், அறம் என்பதன் கண் அகரம் போலப் பின்னெழுத்துக்களோடு தொடர்ந்து நின்று ஒரு பொருளை யுணர்த்தாது, மலையன் என்பதன்கட் பகுதிபோல வேறு நின்று சுட்டுப் பொருளுணர்த்த லின் அகத்துவரும் இதனையும் தனிவரின் என்றார்” என அமைதி கூறி, அவன் இவன் உவன் என்ற பெயரையும் உதாரணங் காட்டினர். அவர்கள் அகத்து வருவதாகக்கொண்ட