உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தொல்காப்பியம்-நன்னூல்



   “எப்பொருளாயினும் என்ற தொல்காப்பியச் சூத்திரத் தொடர்க்கு எகரத்தைத் தனியே வந்த வினாவெழுத்தாகப் பிரித்து “எந்தப் பொருளாயினும்” எனப் பிற்காலத்தார் போலப் பொருளுரையாது “யாதானு மொரு பொருளையாயினும்” எனச் சேனாவரையர் கூறிப்போதலால் யாதுபொருளாயினும் என்பதே எப்பொருளாயினுமென ஒரு மொழியாய்த் திரிந்து நின்றதென்பது அவர் கருத்தாதலறியலாம்.
  எவன் என்ற வினா உயர்திணைக்கு உரித்தன்றென்பதை “அஃதேல் நுமக்கிவன் எவனாம்” என உயர் திணைக்கண்ணும் வருமாலெனின், ஆண்டு அது முறைபற்றி நிற்றலின் அஃறிணைக் கண் வந்ததெனவே படுமென்பது. அஃதேல் துமக்கிவன் என்ன முறையனாம் என்பதல்லது, என்ன முறையாம் பொருந்தா தெனின், என்ன முறை யென்பது ஆண்டு முறைமேல் நில்லாது ஒற்றுமை நயத்தான் முறையுடையோன்மேல் நிற்றலின் அமையுமென்க” என வினாவிடைகளான் வற்புறுத்தினார். ஈண்டு எவன் என்பது அஃறிணையிருபாற்குமுரிய வினா வினைக் குறிப்பாம். அஃறிணை வினாவாய் வரும் எவன் என்னும் வினைக் குறிப்புச் சொல்லே அத்திணைக்கட் பெயராக வும் ஆசிரியர் காலத்திற்குப்பின் வழங்கத் தொடங்கியது. இப் பெயர்ச்சொல் “இன் சொலினி தீன்றல் காண்பா னெவன் கொலோ-வன்சொல் வழங்குவது” எனத் திருக்குறளினும் வழங்குகிறது. இதைப்பற்றி “எவனென்பதோர் பெயருமுண்டு; அஃதிக்காலத்து என்னென்றும் என்னையென்றும் பெயரு முண்டு; அஃதிக்காலத்து என்னென்றும் என்னையென்றும் நிற்கும்” எனச் சேனாவரையர் கூறுதலால், எவன் என்னும் அஃறிணை வினாப்பெயர் பிற்காலத்து என், என்னை, என்று திரிந்து வழங்கப் பெற்றது என்பதும் பெற்றாம். சேனாவரையர் எவன் என்பதனை ஆசிரியர் கருத்தாக வினைக் குறிப்பெனக் கொண்டு அச்சொல் உயர்திணை குறிப்பதன்று என வற் புறுத்திக் கூறினமையானும், யாவன் என்பது முதலாக உயர்திணை வினாப்பெயரைக் குறிப்பிட்டுச் சென்ற தொல்காப்பியனார், தங்காலத்து எவன் என்ற வினா உயர்தினை ஆண்பாலைச் சுட்டி நிற்குமாயின் அதனைக் கூறாதிரார் ஆகலானும் அவர்காலத்து எவன் என்ற சொல் உயர்திணை வினாப் பெயராய் நின்றதன்றென்பது புலனாகும்.