பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு

55



   ஆசிரியர் காலத்துக்குப் பின்னர் யாது யாவை யென்பன முறையே எது, எவை எனவும், யாவன், யாவள், யாவர் என்பன முறையே எவன், எவள், எவர், எனவும் திரிந்து வழங்கினவாத லால் உரையாசிரியரும் நன்னூலாரும், எகரத்தை வினாவெழுத் தாகத் தழுவிக் கொண்டனர் போலும். இங்ஙனம் யாது முதலிய வற்றின் யா என்னும் உயிர்மெய் எகரமாகத்திரியும் முறைமைத் தென்பதை யான் யாம் என்பவற்றின் முதல் யகர மெய்கெட்டு ஆகாரம் எகரமாகத் திரிந்து என், எம், என நிற்கும் எனக்கிளந்த அவற்றின் இயல்பான் உணர்ந்து கொள்ள வைத்தார் ஆசிரியர். ஆதலான் அவ்வியல்பு முறைபற்றியே அச்சொற்களின் யகர ஆகாரம் எகரமாகத் திரிந்ததெனக் கொள்ளல் பொருத்த முடைத்து.
     அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் 
     உளவென மொழிய இசையொடு சிவணிய 
     நரம்பின் மறைய என்மனார் புலவர். (தொல், 33)

இஃது எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையில் நீண்டு நிற்குமிடம் இதுவெனக் கூறுகின்றது.

   (இ-ள்) எழுத்துக்கள் தமக்குச் சொன்ன அளபினைக் கடந்தொலித்தலும், ஒற்றெழுத்துக்கள் அரை மாத்திரையின் நீண்டொலித்தலும் உளவென்பர் ஆசிரியர். அங்கனம் உளவாத லும் குரல் முதலிய ஏழிசையோடு பொருந்திய நரம்பினை யுடைய யாழினது இசை நூலிடத்தன எனச் சொல்லுவர் புலவர் எ-று


   ஒற்றிசை நீடலுமெனவே முன்னர் அளபிறந்துயிர்த்தலும் என்ற விதி ஒற்றல்லாத உயிரெழுத்துக்களுக்கென்பது பெறுதும். ஒற்றிசை நீடலும் உள என்றது, அந்நீட்டிப்பு ஒரு தலையன் றென்பது விளக்கிற்று என்பர் இளம்பூரணர். இசையின் அளவிறந்திசைக்குங்கால் உயிர் பன்னிரண்டு மாத்திரையிறாக வும், ஒற்று (மெய்) பதினொரு மாத்திரையிறாகவும் இசைக்கு மென்பர் இசை நூலார் அவர் கொள்கையை இயற்றமிழாசிரிய ராகிய இவர் “பிறநூன் முடிந்தது தானுடம் படுதல்” என்னும் உத்தியாற் றழுவினார். இசைநூலிடத்து எழுத்துக்கள் தத்தம் மாத்திரையினைக் கடந்தொலித்தலோடு விளி பண்டமாற்றுதல் முதலியவற்றின்கண்ணும் அவை அங்ஙனமிசைக்கு மெனக் கொண்டு,