இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60
தொல்காப்பியம்-நன்னூல்
எனப் பொருள் கூறினார் நச்சினார்க்கினியர். இங்ஙனங் கொண்டாலன்றி இச்சூத்திரம் புணர்மொழிக் குற்றியலுகரத்தை யுணர்த்திற்றென்றல் பொருந்தாது. உகரங் குறுகுமிடம் ஈரெழுத்தொருமொழி முதல் அறுவகையிடம் எனக்கூறிப் போந்த ஆசிரியர், அது புணர்மொழியிடைப்படின் தன் அரைமாத்திரையினுங் குறைந்து ஒலிக்குமிடத்தைப் புணர் மொழிக் குற்றியலுகரமாகவுரைத்துச் செல்லுதலே பொருத்த முடைத்து.
“அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும், எல்லா விறுதியும் உகரம் நிறையும்” எனப்பாடங்கொண்டு, ஆறு தொடரின்கண்ணும் குற்றியலுகரம் வருமெனப் பொருள் கொள்ளாது. ஒரு மாத்திரையில் குறுகாது நிற்குமெனப் பொருள் கொண்டு, அவ்வாற்றான் எல்லா இறுதிக் குற்றியலுகரமும் தன் அரை மாத்திரையின் மிக்கொலிக்குமெனவும் வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து முற்கூறிய அரைமாத்திரையாகிய பழைய இயல்பின் கண்ணே நிற்றலும் உரித்து எனவும் கூறி, இச்சூத்திரம் தன்னியல்பாகிய அரை மாத்திரை பெற்றுச் சிறுபான்மையாய் வருமிடத்தையே சுட்டிற்றெனவும் கொள்வர் இளம்பூரணர். ஒருமொழிக் கண்ணுந் தம் அரை மாத்திரை யியல்பினவாய் வருங் குற்றியலுகரங்களை அரைமாத்திரையின் மிக்கொலிப்பன எனக்கோட லும், வல்லொற்றுத்தொடர்மொழி வல்லெழுத்து வருமிடத்து அரை மாத்திரையிற் சிறிது குறைந்தொலிப்பனவற்றை அரை மாத்திரையியல்பாக ஒலிக்குமெனக்கோடலும் வழக்கிற்கும் விதிக்கும் பொருந்தாவாம். ஆசிரியர் அவ்வியல் நிலையுமேனை மூன்றே என்பதனால் குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை யியல்பெனக் கூறினார். வல்லொற்றுத்தொடர் மொழி வல்லெழுத்து வருவழியல்லது அரைமாத்திரை பெறாது மிக் கொலிப்பனவாயின் ஆசிரியர் அரைமாத்திரை பெறுமென விதிப்பதற்கு இன்றியமையாமை எதுவுமில்லை. அதனால் ஆசிரியர் கருத்துப்படி ஆறீற்றுக் குற்றியலுகரமும் தன் அரை மாத்திரையின் மிகாது இசைக்குமென்பதே பொருத்தமுடைத்து. இச்சூத்திரத்தில் இடைப்படிற் குறுகுமிடத்தைச் சிறுவரவிற் றெனச் சுட்டினமையாலும் ஒருமொழியிடத்தே அரைமாத்திரை பெற்று நிற்பன. வல்லெழுத்து முதன்மொழி வருவழிக் குறுகு