உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிமரபு

64



  மேல் நெட்டெழுத்துக்கள் தாமே மூன்று மாத்திரை முதலாக ஒசைமிக்கு நில்லா எனவும், இரண்டு மாத்திரையினு மிகுத்து மூன்று முதலாக நெட்டெழுத்தினை நீட்ட விரும்புவோர், அம்மாத்திரையினைத் தருதற்குரிய எழுத்தினைக் கூட்டி எழுப்புதல் வேண்டும் எனவுங் கூறினார். இசை குன்றுவதான மொழிக்கண் நெட்டெழுத்தின் பின்னர் ஓசையை நிறைத்து நிற்பன அவற்றின் இனமொத்த குற்றெழுத்துக்களே என்பதனை இச்சூத்திரத்தாற் கூறினார். இதனால் அளபெடைக்கண் நெட்டெழுத்திற்குரிய இரண்டு மாத்திரைக்கு மேற்பட்ட வோசையினை திறைப்பன தெட்டெழுத்தின் பின்னர் கூட்டிய குற்றெழுத்துக்களே என்பது ஆசிரியர் கருத்தாதல் விளங்கும்.
  (உ-ம் ஆஅடை, ஈஇகை எனவரும். 
  செய்யுட்கண் இசை குன்றின் மொழிக்கு முதலினும் இடை யினுங் கடையினும் நின்ற நெட்டெழுத் தேழும் அவ்விசை நிறைக்கத் தந்தம் மாத்திரையின் மிக்கொலிக்கும் எனவும், அவற்றின் பின் வரிவடிவிற் காணப்படும் இனமாய குற்றெழுத்துக்கள் அவ்வாறு நெடி லளபெடுத்தமை யறிதற்கென வரைந்த அறிகுறிகளே எனவும் கருதிய நன்னூலார்,

இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில்
அளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே. (நன். 91)

 எனச் சூத்திரஞ் செய்தார். இங்ஙனம் நெடிலொன்றே அளபெழுந்து மூன்று மாததிரையாய் மிக்கிசைக்கு மெனவும் நெடில் அளபெடுத்ததை பறிதற்கு வரும் வெறும் அறிகுறியே நெடிலின்பின் நின்ற குறில் எனவும் ஒருதலைதுணிதலாக்கி இவர் கூறியது, ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தொடு மாறுபடுகின்றது.
  நன்னூலார் கூறியவாறு நெட்டெழுத்தே அளபெடுத்து நிற்க அதன் பின்னர் வருங் குற்றெழுத்து அறிகுறியாய் வந்த தாயின்,

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
யாஅது மென்னு மவர்.

உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறாஅய் வாழிய நெஞ்சு.

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.