உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தொல்காப்பியம்-நன்னூல்


வாதலின், இத்துணையும் நூன்மரபில் ஒழிபு என்பர் இளம்பூரணர்.


மொழியாக்கம்

நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி. (தொல், 43)

  எழுத்தினான் மொழியாமாறு கூறத்தொடங்கி ஓரெழுத்தொருமொழி யாமாறு கூறுகின்றார்.
 (இ-ள்) நெட்டெழுத்துக்களாகிய உயிர்களேழும் ஓரெழுத்தானாகும் ஒரு மொழியாம்.
 (உ-ம்) ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, எனவரும். ஒளகாரம் உயிர் மெய்க்கண்ணல்லது வாராது. (ஊ-தசை) இவ்விதி உயிர்க்கும் உயிர் மெய்க்கும் பொது.
 இவை, தம்மையுணர நின்றவழி எழுத்தாம்; இடைநின்று பொருளுணர்த்திய வழி சொல்லாம்.
குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே. (தொல். 44)
  (இ-ள்) குற்றெழுத்தைந்தும் ஒரெழுத்தாய் நின்று ஒரு மொழியாய் நிறைதலில்லை.
  ஐந்தும் நிறைதலில்லை யெனவே, அவற்றுட் சில மெய்யோடு கூடி நிறைந்து நின்று மொழியாம் என உம்மை எச்சப்பட்டதென்பார் இளம்பூரணர். (உ-ம்) து, நொ எனவரும் அ, இ, உ எனத் தனிநின்று சுட்டுப்பொருளுணர்த்து வனவற்றை மொழியென்னாதது என்னையெனின் அவை தமக்கென வேறு பொருளின்றிப் பொருளாதியாறன் பொருளையே சுட்டி நிற்றலின் மொழியாமேனும் தனியே ஒரெழுத்தாக நின்று ஒரு மொழியாக நிறைதலிலவாகலின் மொழிநிறைபு இல என்றார். மொழி நிறைபு - மொழியியல்பில் நிறைந்து முழுப்பொருள் தரல்.

இச் சூத்திரமும் உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது.

ஓரெழுத் தொருமொழி யிரெழுத் தொருமொழி
இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே. (தொல். 45)

இஃது எழுத்தினால் ஆகும் மொழிகளின் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது.