இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
68
தொல்காப்பியம்-நன்னூல்
எழுத்துக்கள் மொழியாங்கால் முன்பின் தொடர்பின்றி ஒன்றாய் நின்று தனித்தொலித்தலும், அன்புடையாரிருவர் ஒருவர் ஒருவரை இன்றியமையாது நோக்கி நிற்குமாறுபோல இரண்டெழுத்துக்கள் தம்முள் இணைந்தொலித்தலும், இவ்வாறன்றி முதலெழுத்தினை இரண்டாவதும் இரண்டா மெழுத்தினை மூன்றாவதும் இங்ஙனமே பின்வரும் எழுத்துக் களும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து நின்றொலித்தலும் என இம்மூவகை ஒலி நிலையும் மொழியின் தோற்றத்துடன் ஒருங்கு தோன்றிய தமிழ் நெறியாகும். ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய மூவகை மொழிநிலையினைத் தெளிய உணர்ந்த வைத்தியநாதநாவலர் தாமியற்றிய இலக்கண விளக்கநூலில்,
எழுத்தே தனித்தும் இணைத்துந் தொடர்ந்தும்
பதமாம் பொருள்தரின் அதுபகாப் பதம்பகு
பதமென ஆயிரு பகுதித் தென்ப.
இத்தலைச் சூத்திரம் மொழியாக்கமும் அதன் பகுதியும் உணர்த்துகின்றது.
(இ-ள்) மேற்கூறிய இலக்கணங்களை எய்திநின்ற எழுத்துக்கள் தாமே தனித்து ஒரெழுத்தாகியும், இணைந்து ஈரெழுத்தாகியும், இரண்டனை யிறந்து தொடர்ந்து பல எழுத்தாகியும் நின்று பொருளை விளக்குமெனின் அவ்வெழுத்துக்கள் மொழி எனப்படும் எனச் சூத்திரமுங் கருத்தும் பொருளும் கூறி விளக்கியுள்ளார். தொல்காப்பியர் ஒன்று, இரண்டு, பல என வடநூல் வழக்கினைப் பின்பற்றி இங்ஙனம் மொழிகளை மூவகைப் படுத்தினார் எனக் குற்றங் கூறினாருமுளர். ஒன்று, இரண்டு, பல என்னும் எண்ணு நிலைக்கும் தனித்தொலித்தல், இணைந்தொலித்தல், தொடர்ந்தொலித்தல் என்னும் எழுத்தின் ஒலி நிலைக்கும் வேறுபாடுண்மையை அன்னோர் அறிந்திலர். அன்றியும் தமிழ் நூலிற்போன்று வடநூல் இலக்கண மரபில் ஏகாக்ஷர பதம், துவியக்ஷர பதம் பகுவக்ஷர பதம் என வழங்கும் வழக்கின்மையும் கருதற்குரியது.
ஆசிரியர் செய்யுளியலில் “உயிரில் லெழுத்து மெண்ணப் படா” என்பதனால் ஒற்றுமுதலியன எழுத்தெண்ணவும் அலகிடவும் பெறாவென ஆண்டுக்கூறிய விதியை வழக்கினிடத்தும் மேற்கொண்டு நச்சினார்க்கினியர் ஒற்று முதலியவற்றைக் கூட்டி எழுத்தாகக்கோடல் ஆசிரியர் கருத்தன்றெனக் கூறினார். நாகு முதலிய சொற்களில் குற்றியலுகரத்தையும் எழுத்தாகக்கொண்டு