இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மொழிமரபு
69
அவற்றை ஈரெழுத்தொரு மொழி எனவும், வண்டு பத்து, முதலிய குற்றியலுகர வீற்றுச் சொற்களில் இடையே வரும் மெய் யெழுத்துக்களையும் எழுத்தாகவெண்ணி அவற்றை இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழியாகக் கொண்டு வன்றொடர் மென்றொடர் எனவும் பெயர்கூறிப் போதலால் எழுத்ததிகாரத்து ஒற்றுங் குற்றுகரமுங் கூட்டி எண்ணி மொழியாகக்கோடல் ஆசிரியர்க்கு உடன்பாடாதல் பெறப்படும்.
(உ-ம்) ஆ, மணி, வரகு, எனவரும்.
மெய்யி னியக்கும் அகரமொடு சிவனும். (தொல். 48)
இது தனி மெய்கள் இயங்கும் முறை கூறுகின்றது.
(இ-ள்) தனி மெய்களின் நடப்பு அகரத்தோடு பொருந்தி நடக்கும் (எ-று). மெய்கள் நாவால் உருவாக இயக்கும் இயக்கமே யன்றிக் கையால் வடிவாக இயக்கும் நிலைமைக் கண்ணும் அகரத்தோடு பொருந்தி நடக்குமென்பது முன்னர் அகரங் கலந்த வடிவே எழுதிப் பின்னர் மெய் நிலைமை காட்டப் புள்ளியிட்டெழுதலாற் புலனாம்.
இங்ஙனம் மெய்க்கண் அகரங் கலந்து நிற்குமாறு போலப் பதினோருயிர்க் கண்ணும் அகரங்கலந்து நிற்குமென்பதனைப் பிறர்க்கு உணர்த்துதலருமை கருதி ஆசிரியர் கூறாதொழிந்தார்; இறைவன் இயங்குதிணைக் கண்ணும் நிலைத்திணைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல, அகரமும் உயிர்க்கண்ணும் தனி மெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாகியே நிற்குமென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. “அகரமுதல” என்னுங் குறளான் “அகரமாகிய முதலையுடைய எழுத்துக்களெல்லாம், அதுபோல, இறைவனாகிய முதலை யுடைத்து உலகம் என வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும், கண்ணன் எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே’ எனக் கூறியவாற்றானும் பிறநூல்களாலும் உணர்க வெனத் தெளிவுரை கூறினார் நச்சினார்க்கினியர்.
தன்னை புணர்த்தாது வேறு பொருளுணர்த்துஞ் சொல்போல “டறலள, (சூத். 23, வென்பன உயிர் மெய்யை யுணர்த்தாது தனிமெய்யை யுணர்த்தலானும் ஒற்றினை யுயிர் மெய்போலச் சொல்லுகின்ற வழுவமைதி யிலக்கணத்தானும் இச்சூத்திரம் மொழிமரபின் கண்ணதாயிற்று.