பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்
நிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம்மெய்யப்பன் தமிழ் ஆய்வகம். கி.பி.2000 அக்டோபர்த் திங்கள் விசயதசமி நன்னாளாம் வெற்றித்திருநாளில் சிதம்பரத்தில் தோற்றுவிக்கப்பட்டது. மெய்யப்பன் அறக்கட்டளை தோற்றுவித்த இந்த ஆய்வகம்தான் தமிழ்நாட்டின் முதல் தனியார் ஆய்வுமையம். இதன் முதல் வெளியீடு, முனைவர் அமிர்தலிங்கம் அரும்பாடுபட்டுத் தொகுத்த ‘சங்க இலக்கியக் களஞ்சியம்’. அதனை அடுத்து இரண்டாவது வெளியீடாகச் சங்க இலக்கியத் தொன்மக் களஞ்சியத்தைச் சிறப்பாக வெளியிட்டது. ஓராண்டில் தமிழுக்கு இன்றியமையாத அடிப்படை நூல்கள் 20 வெளியிட்டுத் தன் ஆய்வுப் பரப்பை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. தொடர்ந்து அறிஞர் அமிர்தலிங்கம் தொல்காப்பியக் களஞ்சியத்தைப் பெருமுயற்சியுடன் தொகுத்து வருகிறார்கள்.
இப்பொழுது அறிஞர் க. வெள்ளைவாரணனார் அவர்களின் தொல்காப்பிய நன்னூல் ஒப்பிலக்கண ஆய்வினை மிகுந்த உவகையுடன் வெளியிடுகிறது. அரிய நூல்கள் வெளியிடும் திட்டத்தில் இது முதன்மை பெறுகிறது.
தமிழ் மறுமலர்ச்சியில் மீட்டெடுக்கப்பட்ட அடையாளங்களில் தொல்காப்பியம் ஒன்று. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வித்துவான், புலவர் தேர்விற்கு நன்னூல் பாடநூலாக அமைந்தது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வித்துவான் மாணவர்கள் நன்னூலைக் கற்றனர். தவத்திரு ஆறுமுக நாவலர் அவர்களின் காண்டிகைப் பதிப்பு நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைப் பெற்று நன்னூல் பரவுவதற்கு நற்றுணை ஆயிற்று.