பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தொல்காப்பியம்-நன்னூல்



  இவ்விதி இன்றியமையாததாகவும் சுருக்க நூலாதலின் நன்னூலார் இதனைக் கூறிற்றிலர்.

தம்மியல் கிளப்பின் எல்லா வெழுத்தும்
மெய்ந்நிலை மயக்க மான மில்லை. (தொல். 47)

 இது மெய்மயக்கத்திற்குப் புறனடை கூறுகின்றது.
 (இ-ள்) எல்லா மெய்யெழுத்தும் மொழியிடையின்றித் தம் வடிவினியல்பைச் சொல்லுமிடத்து மெய்மயக்கநிலையில் மயங்கி வருதல் குற்றமன்று (எ-று).

(உ-ம்) வல்லெழுத் தியையின் டகரமாகும் (புள்ளி மயங்கு, 7.)

 இங்ஙனம் மயங்கி வருதல் மொழியாய்த் தொடருமிடத் தாகலான் இது மொழிமரபின்கண் வைக்கப்பட்டது.
 நச்சினார்க்கினியர் உரையாசிரியர் கருத்தை மறுத்து இது முன்னர் மெய்க்கண் உயிர் நின்றவாறு கூறி, அவ்வுயிர் மெய்க் கண் ஏறி உயிர்மெய்யாய் நின்ற காலத்து அம்மெய்யாற் பெயர் பெறுமாறு கூறுகின்றது எனக் கருத்துரைத்து, ‘பன்னிருயிரும் வன்மை மென்மை இடைமையாகிய மெய்யின் தன்மையிலே தம்முயிர்த் தன்மை மயங்கிற்றாகப் பெயர் கூறின் குற்றமில்லை’ எனப்பொருள் கூறி, ‘என்றது, வல்லெழுத்து மெல்லெழுத்து இடையெழுத்து என உயிர்மெய்க்கும் பெயரிட்டாளுதல் கூறிற்று’ என விளக்கமுங் கூறினர். உயிர் மெய்யை வேற்றுமை நயங்கருதி இரண்டெழுத்தாகக் கூறும் ஆசிரியர், “வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே”, “மெல்லெழுத் தியையினிறு தியொ டுறழும் “இடையெழுத்தென்ப யரலவழள” வென்ற விடத்து ஒரெழுத்தாகக் கூறினாரென்றல் பொருந்தாதாகலானும் “வல்லெழுத்தியையி னவ்வெழுத்து மிகுமே” யென் புழி வல்லெழுத் தென்பதனை உயிர்மெய்யெழுத்தாகக் கொள்ளின் அவ்வெழுத்து மிகும் என்பது அவ்வுயிர்மெய் யெழுத்து மிகுமெனப் பொருள்பட்டு மாறுகொள்ளுமாத லானும், வன்மை, மென்மை, இடைமையாகிய தன்மை மெய்க்கேயன்றி உயிர்க்கில்லாமையானும், வல்லெழுத்து மெல்லெழுத்து இடையெழுத்து என்ற பெயர்கள் உயிர்மெய்க்கன்றி மெய்க்கே யுரியெனவென்பது அவற்றைத் தொகுத்து “அம்மூவாறும்” எனச் சுட்டி மெய் மயக்கங் கூறுதலாற் புலனாமாதலானும்