இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மொழிமரபு
75
ஒரோவழி ணகாரத்தின் முன் மகரம் ஈரொற்றாய் நின்று அரை மாத்திரையிற் குறுகி நிற்றலைத் தழிஇயினார். இவ்வாறு செய்யுளகத்து லகார ளகார வொற்றுத் திரிந்தமை காரணமாக னகார ணகாரங்களின் முன்வரும் மகரவொற்று முன்னர்க் கூறியவாறே தன் அரை மாத்திரையிற் குறுகி அவற்றுடன் ஈரொற்றுடனிலையாய் வருதலை நன்னூலார்,
லளமெய் திரிந்த னணமுன் மகாரம் நைந்தீ ரொற்றாம் செய்யு ளுள்ளே, (நன். 20)
என்பதனாற் குறிப்பிடுவர்.
மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினும் எழுத்தியல் திரியா வென்மனார் புலவர். (தொல். 53)
இஃது எழுத்துக்கட்கு மொழிக்கண் மாத்திரை காரண மாகப் பிறப்பதோர். ஐயந் தீர்க்கின்றது.
(இ-ள்) மொழிக்கண் படுத்துச் சொல்லினும் தெரிந்து கொண்டு வேறு சொல்லினும் உயிரும் மெய்யுமாகிய எழுத்துக் கள் தத்தம் மாத்திரை முதலிய இயல்பில் திரிந்து நில்லா என்றவாறு. .
மேல் போலும் என்ற மொழியின் மகரம் தன் அரையள பிற் குறைவது போன்று ஏனையெழுத்துக்கள் தம்மியல்பு வேறுபடுமியல்பினவோ என்று, ஐயுறுவாரை நோக்கி, மொழிக் கண்படுத்திச் சொல்லினும் தெரிந்து கொண்டு வேறே சொல்லினும் எழுத்துக்கள் தத்தம் மாத்திரையியல்பில் திரியாவெனக் கூறித் தெளிவித்தார்.
ஈண்டு எழுத்தியல் திரியாவென்றது, மொழிக்கட்பட்டுத் தெரிந்து வேறிசைக்கப்படும் முப்பதெழுத்துக்களையுமே. தெரிந்து வேறிசைக்கப்படு மியல்பின்றி மொழியைச் சார்ந்து வருவன மூன்றும், சார்ந்து வருதலாகிய தம்மியல்பின்றி வேறு வகையாற் றிரிபுபடவிசைப்பன வாகாவாதலின் இவ்விதி அவற்றிற்கு வேண்டுவதன்றாம். மொழிக்கண் படுத்துச் சொல்லி னும் தெரிந்து வேறு சொல்லினும் எழுத்தியல் திரியாவெனவே இவற்றாற்பொருள் திரியுமென்றாராயிற்று. வேறு இசைத்தல் என்றதனால் எடுத்தல் படுத்தல் முதலிய ஓசை வேற்றுமைக் கண்ணும் எழுத்தியல் திரியாவென்பது கொள்க. எடுத்தல் படுத்தலால் மாத்திரை வேறுபட்டுப் பொருள் வேறுபடு மென்பதை, காது கட்டு முதலிய குற்றியலுகரங்கள் இதழ்குவித்து