சைவ மடங்கள் பக்தி இலக்கியத்திற்கு முதன்மை கொடுத்து தொல்காப்பியம். சங்க இலக்கியம் முதலியவற்றின் கல்விக்கு இரண்டாமிடத்தையே கொடுத்தன.
விடுதலைக்குப்பின் இந்திய மொழிகள் வீறுபெற்றன. தமிழ்க் கல்வியில் சங்க இலக்கியக் கல்வி முதன்மை பெற்றது. பாடத் திட்டத்தில் தொல்காப்பியம் சிறப்பிடம் பெற்றது. தொல்காப்பியப் பதிப்புகள் பல்கின. ஆய்வுகள் வளர்ந்தன. மொழியியல் தமிழகத்தில் வேர் ஊன்றி விழுதுவிட்ட காலத்தில் ஒல்காப் பெருமைத் தொல்காப்பியரின் மொழியியல் ஆற்றல் முழுதும் உணரப்பெற்றது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முது முனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களால் திருவனந்தபுரத்தில் திராவிட மொழியியல் ஆய்வு மன்றம் தோற்றுவிக்கப்பட்டது. அது தமிழின் மூத்த இலக்கணமாகிய தொல்காப்பியம், பழந்தமிழ் இலக்கியங்களாகிய சங்க இலக்கியம் பற்றிய ஆய்வுக்கு முதன்மை தந்தது. பல ஏடுகளை ஆராய்ந்து மிகச் சிறந்த பாடங்களைத் தேர்ந்து தொல்காப்பியச் செம்பதிப்பினைச் சிறப்பாக வெளியிட்டது. தொல்காப்பியச் சொல்லடைவும் வெளியிட்டது. பேருழைப்பின் பயனாக, தொல்காப்பியம் முழுமைக்கும் சொற்பொருள் அகராதியினை அண்மையில் வெளியிட்டது. அந்த ஆய்வகம் அரிதின் முயன்று தேடித் தொகுத்தபடி கி.பி. 2000ஆம் வரை தொல்காப்பியத்திற்கு மொத்தம் 191 பதிப்புகள் வெளிவந்துள்ள செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
மெய்யப்பன் தமிழாய்வகம் தொல்காப்பியக் களஞ்சியத்தை வெளியிடும் திட்டத்திற்குச் செய்திகள் சேகரித்து வரும்பொழுது நூற்றுக்கு மேற்பட்ட நூல்களும் 150க்கு மேற்பட்ட ஆய்வேடுகளும் 1000க்கு மேற்பட்ட கட்டுரைக்ளும் இதுவரை கிடைத்துள்ளன. இந்தக் களஞ்சியப் பணி நிறைவுறும்பொழுது இன்னும் துல்லியமான எண்ணிக்கையை நாம் பெறமுடியும்.
குறிப்பாகவும் சிறப்பாகவும் நமக்குக் கிடைக்கும் உண்மை யாதெனில், மொழியியலார் இந்த அரைநூற்றாண்டில் தொல்காப்பிய ஆய்வுக்குப் பெரும்பங்களிப்பைச் செய்துள்ளனர் என்பதாகும்.
தொல்காப்பியப் பதிப்பு வரலாறு தொல்காப்பியக்கல்வி வரலாறு தொல்காப்பிய இலக்கண ஆய்வு வரலாறு தொல்காப்பிய மொழியியல் ஆய்வுகள்