பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


జ_0 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

செல்ல அவனும் அவன்மேற்படையுடன் செல்ல, அவ்விருவரும் ஒரு வரை யொருவர் அடுதல் குறித்து மேல்செல்லுதலாகிய ஒரு தொழிலேபுரிதலின், அது வஞ்சி என ஒரே பெயர் பெறும். மருதத் துப் புறனாகிய உழிஞைத்திணை பகையரசனது அரணை வளைத் துக் கொண்டு அழிதலும், அவ்வரனுக்கு உரிய மன்னன் பகைவர்க்கு இடங்கொடாது தனது அரணைக் காத்துக் கொள்ளுதலும் ஆகிய தொழில்வேறுபாடு குறித்து முறையே உழிஞை எனவும் நொச்சி எனவும் இருபெயர் பெறும். நெய்தற்றிணைப் புறனாகிய தும்பைத்தினை தனது வன்மையினை உலகத்தார் உயர்த்துப் புகழ் தலையே பொருளாகக் கருதிப் போர்மேற் கொண்டு வந்த வேந்தனை மாற்றானாகிய வேந்தனும் தனது ஆற்றலைப் புலப் படுத்தும் நோக்குடன் எதிர்த்துச் செல்ல அவ்விரு பெருவேந்தரும் ஒருகளத்துப் பொருதலாகிய ஒருதொழிலே புரிதலின் தும்பை என ஒருபெயர் பெறும். பாலைத்தினைப் புறனாகிய வாகைத்திணை வேந்தராயினும் ஏனையோராயினும் தத்தமது தொழிற்றிறத்தின் மிக்கு மேம்படுதலாகிய வெற்றியினைக் குறித்தலால் வாகை என ஒருபெயர் பெறும். பெருந்திணைப் புறனாகிய காஞ்சித் திணை நிலையாமையாகிய நோந்திற (துன்ப)ப் பொருளையே குறித்து வருதலால் காஞ்சி என ஒருபெயர் பெறும். கைக்கிளைப் புறனாகிய பாடாண்திணை புலவர்பாடும் புகழுடைமையாகிய செந்திறம் என்னும் ஒருபொருளையே குறித்து வருதலின் பாடாண் என ஒருபெயர் பெறும் என விளக்குவர் இளம்பூரணர்.

இவ்வாறு புறத்திணை ஏழும் முறையே வெட்சி (அதன் துறையாகிய) கரந்தை, வஞ்சி, உழிஞை, (அதன் துறையாகிய) நொச்சி, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனத் தொழில்வேறுபாட்டால் ஒன்பதாயின. மேற்குறித்த புறத்திணை எல்லாவற்றுக்கும் பொதுவாக அமைந்த துறைகளைத் தொகுத்து பொதுவியல் என ஒரு திணையும், அகத்திணை ஏழனுள் சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாத அன்பின் ஐந்திணை நீங்கலாக அவற்றின் பக்கத்தனவாகிய கைக்கிளையும் பெருந்திணையும் சுட்டியொருவர் பெயர் கொளப்பெறின் புறத்திணைப் பக்கத்தன வாகக் கருதப்படுமாதலால், அவ்வாறு இயற்பெயர் சுட்டிவரும் கைக்கிளை பெருந்திணை என்னும் இரண்டினையும் புறத்தின் பாற்படுத்துக் கைக்கிளை பெருந்திணை என இருவேறு திணை களும் கொண்டு புறத்திணை பன்னிரண்டெனப் பகுத்துரைத்தல் தொல்காப்பியனார்க்குப் பிற்பட்டுத் தோன்றிய பன்னிருபடலம் முதலிய நூலாசிரியர்கள் கூறிய புறத்திணையிலக்கண மரபாகும்.