பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொல்காப்பியம்-பொருளதிகாரம் உரைவளம்

முகவுரை

உலகியல் வழக்கும் இலக்கியத் தொன்மையும் ஒருசேர வாய்க்கப்பெற்ற உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்வது தமிழ் என்பதனை அறிஞர் பலரும் நன்குணர்வர். பல்லாயிரம் ஆண்டு களாக மக்களது பேச்சு மொழியாகவும் செய்யுள் மொழியாகவும் வழங்கப்பெற்றுவரும் தமிழ்மொழி, காலந்தோறும் உலகியல் வாழ்வில் ஏற்படும் பல்வேறு இடையூறுகட்குட்பட்டுத் தனது உருத்திரியாது இறப்பு எதிர்வு நிகழ்வு என்னும் முக்காலத்திற்கும் ஒத்துத் தொடரும் நிலைபேறுடையதாகவும் உயர்திணை மக்க ளுக்குக் கண்ணெனச் சிறப்பித்துக் கூறப்படும் கல்வி வளர்ச்சியிற் பல வேறு கலைத்துறைகட்கும் நிலைக்களமாய் விரிந்து இடங் கொடுக்கும் சொற்பரப்புடையதாகவும் நம்முன்னோர்களால் இலக்கணவரம்புடன் போற்றி வளர்க்கப்பெற்றுளது.

இவ்வாறு எக்காலத்தும் நிலைபேறுடைய இனிய எளிய இலக்கணவரம்புகோலித் தமிழ்மொழியைப் போற்றி வளர்த்த புலமைச் சான்றோர்களில் முதற்கண்வைத்து எண்ணத்தக்க தலைமைச் சிறப்பும் தொன்மையும் வாய்ந்தவர் ஆசிரியர் தொல் காப்பியனார் என்பதனைத் தமிழுலகம் நன்குனரும், தொல் காப்பியனார் இயற்றிய இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியம் தமிழ்மொழிக்கு எக்காலத்தும் அமையவேண்டிய இயல்பாகிய வளர்ச்சி நெறிகளை மனத்துட்கொண்டு இயற்றப்பெற்றதாகும். எழுத்தின் திறனாலும் சொல்வளத்தாலும் வழக்குஞ்செய்யுளு மாகிய இருவகை வழக்கு நெறிகளாலும் தமிழ்மொழி பண்டைக் காலத்தில் எவ்வாறு இலக்கணவரம்புகோலி வளர்க்கப்பெற்றது என்பதனை இக்காலத்தாரும் தெளிவாகவுணர்ந்து பின்பற்றுதற் குரிய இயற்றமிழிலக்கண நூலாகத் திகழ்வது இத்தொல்காப்பியம்