பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

之一 தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

புறத்து நிகழும் பொருள் பதினாறு என்று சொல்லுவர் என்றவாறு.

புறத்து நிகழ்வதனைப் புறம் என்றார்.

பண்ணைத் தோன்றிய கண்ணிய புறன் எனப் பெயரெச்ச அடுக்காகக் கூட்டுக. அன்றியும், எண்ணான்கு பொருளுங் கண்ணிய புறன் என ஒருசொல் நடையாக ஒட்டித் தோன்றிய என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாக்கினும் அமையும். புறன் என்னும் எழுவாய் நானான்கென்னும் பயனிலை கொண்டு முடிந்தது.

ஈண்டுச் சொல்லப்படுகின்ற பதினாறு பொருளும் கற்று நல்லொழுக்கு ஒழுகும் அறிவுடையார் அவைக்கண் தோன்றாமையாற் பண்ணைத் தோன்றிய என்றார். என்னை? நகைக்குக் காரணமாகிய எள்ளல் அவர்கண் தோன்றாமையின். பிறவும் அன்ன.

முப்பத்திரண்டாவன - நகை முதலானவற்றிற்கேதுவாம் எள்ளல் முதலாக விளையாட்டீறாக முன்னெடுத் தோதப்படுகின்றன. அவற்றைக் குறித்த புறனாவன சுவையும் குறிப்பும். வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, நடுவுநிலைமை என்றும், வீரக்குறிப்பு, அச்சக் குறிப்பு, இழிப்புக் குறிப்பு, வியப்புக்குறிப்பு, காமக்குறிப்பு, அவலக்குறிப்பு, உருத்திரக்குறிப்பு, நகைக் குறிப்பு, நடுவுநிலைமைக் குறிப்பு என்றும் சொல்லப்பட்ட பதினெட்டினும், நடுவுநிலைமையும் அதன் குறிப்பும் ஒழித்து ஏனைய பதினாறுமாம்.

வியப்பெனினும் அற்புதமெனினும் ஒக்கும். காமமெனினுஞ் சிங்காரமெனினும் ஒக்கும். அவலம் எனினும் கருணையெனினும் ஒக்கும். உருத்திரம் எனினும் வெகுளியெனினும் ஒக்கும். நடுவு நிலைமை எனினும் மத்திமம் எனினும் சாந்தம் எனினும் ஒக்கும். வீரம் என்பது மாற்றாரைக் குறித்து நிகழ்வது. அச்சம் என்பது அஞ்சத்தகுவன கண்ட வழி நிகழ்வது. இழிபென்பது இழிக்கத்தக்கன கண்டுழி நிகழ்வது. வியப்பென்பது வியக்கத்தக்கன கண்டுழி நிகழ்வது. காமம் என்பது இன்ப நிகழ்ச்சியான் நிகழ்வது. அவலம் என்பது இழவுபற்றிப் பிறப்பது. உருத்திரம் என்பது அவமதிப்பாற்பிறப்பது. நகையென்பது இகழ்ச்சி முதலாயினவற்றாற் பிறப்பது. நடுவுநிலைமை யென்பது யாதொன்றானும் விகாரப்படாமை.