பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமவியல் 185 அவளுடைய தோழி முதலிய ஆயத்தாராயின் தம் நிலத்துள்ளன எல்லாம் அறிந்திருத்தலால் எத்தகைய தவறுமில்லை யெனவும் கூறியவாறு. தலைமகன் உள்ளுறை யுவமை கூறுங்கால் தனது உரனுடைமை தோன்றச் சொல்லப்படும். பாங்கன், பாணன் முதலிய ஏனையோர் கூறுங்கால் இடம் வரையப்படாது தாம் தாம் அறிந்த சொல்லாலும் நிலம் பெயர்ந்துரையாத பொருளாலும் அந்நிலத்துள்ள பொருளாலும் உள்ளுறையுவமை சொல்லுதற் குரியர், மகிழ்ச்சி விளைக்குஞ் சொல்லும் புலவியாகிய துன்பத்தினைப் புலப்படுத்துஞ் சொல்லும் இவ்வுள்ளுறையுவமையிடத்தே தோன்று மென்றும், மேற்கூறிய மகிழ்ச்சி, புலவி என்னும் இரண்டிடத்தும் தலைமகள் உள்ளுறை கூறுதற்கு உரியள் என்றும் கூறுவர் ஆசிரியர். எனவே இவ்விரண்டுமல்லாத ஏனைய இடங்களில் தலைமகள் உள்ளுறை கூறப்பெருள் என்றவாறு. இத்தகைய இடவரையறை யெதுவும் தலைமகனுக்கு இல்லை. ஆகவே அவன் கூறும் உள்ளுறை எப்பொருட்கண்ணும் வரும் என்பது கருத்து. தோழியும் செவிலியும் உள்ளுறையுவமம் கூறுங் கால், காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாறு நோக்கிக் கேட்டோர் எளிதில் உய்த்துணர்ந்து கொள்ளுதற்குரிய நெறியால் கூறுதற்குரியராவர். இவ்வாறு அகத்திணை யொழுகலாற்றில் உள்ளுறையுவமம் கூறுதற்குரியார் இன்னின்னர் என விதந்து கூறவே, இவர்களல்லாத தலைமகளது நற்ருயும் ஆயத்தாரும் தந்தையும் தமையன்மாரும் உள்ளுறையுவமை கூறப்பெருள் என்பதும், இங்ங்ணம் உள்ளுறை கொள்ளுதல் அகத்திணை யொழுகலாற்றிற் போலப் புறத்திணை யொழுகலாற்றில் அத்துணை இன்றியமையாத தன்ருதலின் இவ்வுள்ளுறையுவமத்தினை அகத் திணைக்கே சிறப்புரிமை யுடையதாக ஆசிரியர் எடுத்தோதின ரென்பதும் நன்கு பெறப்படும்.