பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III பொருள் எழுத்தைப் பற்றியும் சொல்லைப் பற்றியும் விரிவாக உரைத்த ஆசிரியர் தொல்காப்பியனார். எழுத்தால் ஆக்கப்பட்ட சொற்றொடர் கருவியாக அறியப்படும் பொருளைப் பற்றி உரைப்பதுவே அவர் நூலின் மூன்றாம் பகுதியாகும். எழுத்தும் சொல்லும் மொழியைப் பற்றியன. மொழியைத் திருத்தமாக நன்கு பயன்படுத்த மொழிநூலறிவு வேண்டும். திருத்தமுற்ற மொழியின் செம்மைப் பண்பு நிலைத்திருக்க அம்மொழியில் உரையும், பாட்டும் தோன்றுதல் வேண்டும். அவ்வாறு தோன்றும் உரையும் பாட்டுமே இலக்கியம் எனப்பட்டன. பண்பட்ட மொழியின் செம்மைசால் மலரே இலக்கிய மாகும். ஒரு மொழிக்கு வளமும், வாழ்வும் அளிப்பது இலக்கியமே. இலக்கியம் தோன்றப் பெறாத மொழி நூற்றாண்டுதோறும் மாறிக் கொண்டே செல்லும்; ஒன்றே பலவாகப் பிரிந்து அழியினும் அழியும். ஆகவே மொழியின் நிலைத்த வாழ்வுக்கு இலக்கியம் பெரிதும் துணை புரியும்