பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.220 தொல்காப்பிய ஆராய்ச்சி இவை மூன்றினாலும் தமிழர்கள் ஒன்றுமறியாக் காட்டுவாழ் மக்கள் அல்லர்; இருபதாம் நூற்றாண்டு நாகரிகத்தினை இயல்பாகவே கொண்டிருந்தனர் என்று தெளிதல் கூடும். இம்முறைகள் ஆங்கொன் றும், ஈங்கொன்றுமாக ஏதோ ஓர் இடத்தில் யாரோ ஒருவரால் செய்யப்பட்டனவாக இராமல் அமைப்பு முறைகளாக அமைந்து யாவராலும் போற்றப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. "உழிஞை' என்பது ஒரு நாட்டை வென்று அகப்படுத்துவதற்காக அந்நாட்டின் மதிலை வளைத்து முற்றுகையிடுவது. வானஊர்தியும் அணுகுண்டு களும் தோன்றியுள்ள இக்காலத்தில் மதிலால் பயனில்லை.வில் அம்பினால் போர் செய்த அக்காலத் தில் மதிலுக்குப் பயனும் மதிப்புமிருந்தன. தலைநகர்கள் எல்லாம் மதில் சிறப்புடையனவாகவே இருந்தன. அம்மதில்களை முற்றுகையிடுங்கால் உள்ளிருக்கும் அரசன் கோட்டைக் கதவடைத்து உள்ளிருந்தே போர் புரிவான். வெளியே இருப்பவன் உள்ளே செல்லவும், உள்ளே இருப்பவன் வெளியில் வரவும் முயலும் நிகழ்ச்சியாகக் காட்சியளிக்கும். தலைவனிடம் ஊடல் கொண்டுள்ள தலைவியானவள் கதவை அடைத்துக்கொண்டு உள்ளிருக்கவும். தலைவன் உள்ளே செல்ல முயல்வான். தலைவன் தன் முயற்சியில் தோல்வியுற்று அகன்ற பின்னர் தலைவி வெற்றிக் களிப்போடு வெளி வருவாள். ஆதலின் உழிஞை மருதத்திற்குப் புறனாயிற்று. மருதம் என்பது ஊடலும் அதற்குரிய செயல்களும் ஆகும். உழிஞை இருபது துறைகளைப் பெற்றுள்ளது. பிற்காலத்தார் தனியாகப் பிரித்த நொச்சியும் உழிஞை யின் பகுதியாகும்.