பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 தொல்காப்பிய ஆராய்ச்சி குழவி என்பது இன்று மக்களுக்கு உரியதாய் இருப்பினும்,யானை,ஆ,எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம் என்பனவற்றின் குட்டிகளைக் குறித்துள்ளது. குழவி, மகவு எனும் இரண்டே அக்காலத்தில் மக்களினக் குழந்தைகட்கு உரியனவாய் இருந்தன. பிள்ளை என்பது தற்கால வழக்கு.

  • குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை கிழவ வல்ல மக்கட் கண்ணே'

பிள்ளை, குழவி,கன்று, போத்து என்பன நெல்லும் புல்லும் ஒழிந்த ஓரறிவு உயிர்கட்கும் உரியன. ஆண்பாற் பெயர்களாவன :- ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள்,அப்பர்,போத்து, கண்டி, கடுவன் முதலியன. களிறு என்பது யானை, பன்றி முதலியவற்றிற் குரியது. ஒருத்தல் என்பது புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை முதலியன வற்றின் ஆணைக் குறிக்கும். ஏறு என்பது பன்றி, புல்வாய், உழை, கவரி எருமை,மரை,சுறா என்பனவற்றின் ஆணுக்குரியது. போத்து என்பது பெற்றம், எருமை, புலி, மரை. புல்வாய் என்பனவற்றிற்கும், நீர்வாழ் உயிர்கட்கும் மயிலுக்கும் எழாலுக்கும் உரியது. இரலை, கலை என்பன புல்வாய்க்கு உரிய கலை என்னும் சொல் மானிற்கும் முசுவிற்கும் உரியதே. போத்தை, தகர், உதள், அப்பர் என்பன ஆட்டிற் குரிய ஆண்பாற் பெயர்கள்.