பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தொல்காப்பிய ஆராய்ச்சி மொழியின் ஒலிமுறை விதிக்கே மாறுபட்டதென்றும் அறிஞர் கால்டுவெல் கூறியுள்ளார் (ஒப்பிலக்கணம் பக்கம் 135). தமிழ் மொழி நூலார் குற்றியலுகர ஒலி நுட்பத்தை நன்கு அறிந்திருந்தனர் என்பது தொல் காப்பியர் இதற்கெனத் தனியியல் வகுத்து விரித்துக் கூறியிருப்பதிலிருந்தே நன்கு தெளியலாகும். இற்றை நாள் மொழி நூலறிஞர்கள் சொற்களில் தோன்றும் ஒலிகளை (Phonemes) வகைப்படுத்தி ஆராய்ந்து வருவதுபோல் ஆசிரியர் தொல்காப்பியர் தமிழ்மொழி ஒலிகளை ஒன்பது இயல்களால் நானூற்று எண்பத்து மூன்று நூற்பாக்களால் தெளிவு பெற ஆராய்ந்து கூறியிருக்கும் சீர்மை கற்று மகிழ்வதற்குரியது. அங்ஙனம் விரிவாக ஆராய்ந்தும் உயிர் உள்ள மொழி, மாற்றத்திற்குரியதாகும் என்ற உண்மையை ஓர்ந்து, " கிளந்த வல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கில் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கில் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்" என்றும் கூறியுள்ளார். சொற்களின் ஒலிக் கூறுக ளைப் பற்றி அறிந்த நாம் இனிச் சொற்களைப் பற்றி அவர் கூறும் கருத்துக்களை அடுத்த இயலில் ஆராய்வோம்.