பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
vii

வேறுபாடுகள் மட்டும் இடம் பெற்றுள்ளன.

மர்ரே பதிப்பில் எழுத்தில் 30, சொல்லில் 74. பொருளில் 483 ஆக 587 பாடபேதங்கள் தரப்பெற்றுள்ளன.

உரைப்பதிப்புகளில் பெரும்பாலான பதிப்பாசிரியர்கள் ஆங்காங்கே பாடவேறுபாடுகளைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.

இத்தகைய தனி உரையாசிரியர் ஒருவரின் பதிப்பேயன்றிச் சொல்லதிகார உரைக்கோவையிலும், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் வெளியிடுகின்ற உரைவளப் பதிப்புக்களிலும் பெரும்பாலான பாடவேறுபாடுகள் குறிக்கப்பட்டிருப்பதுடன், அவற்றின் வன்மை மென்மைகளும் ஆராயப் பெற்றுள்ளன.

சோமசுந்தர பாரதியார் அகம், புறம், மெய்ப்பாட்டியல் புத்துரைகளில் பாடவேறுபாடுகள் குறித்தமையோடு சில நூற்பாக்களில் புதியவனவாகத் தம் கருத்துக்கேற்பப் பாடங்களை மாற்றியமைத்தும் ஆய்வு செய்துள்ளார். புலவர் குழந்தையுரையில் புதிய நோக்கில் உரை தரும் போக்கிற் கேற்பச் சில பாடங்கள் திருத்தப்பட்டுள்ளன. மூலபாட ஆய்வாளர்களுக்குச் சுவடிச்சான்று இன்றியமையாத ஆதாரம் ஆகும் என்பதுவும் இங்கே நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

தொல்காப்பியக் களஞ்சியம் எனும் நூலில் பல பாடவேறுபாடுகள் (பக். 338-351) காணப்பெறும். "மர்ரே ராஜம் பதிப்பில் (1960) தந்தவற்றை விரிவு படுத்தியுள்ளார்" என்பர் ச.வே.சு (தொல். பதிப். பக். 148)

வெ. பழனியப்பன் அவர்களின் தமிழ் நூல்களில் பாட வேறுபாடுகள் என்றும் முனைவர் பட்ட ஆய்வேடு தொல்காப்பியப் பாட வேறுபாடுகளைச் சிறப்பாக ஆய்வு செய்கிறது. இது தொடர்பாக 1. தொல்காப்பியப் பாடவேறுபாடுகள் பகுப்பாய்வு 2. தொல்காப்பியப் பதிப்புகளும் பாடவேறுபாடுகளும் 3. தொல்காப்பிய வுரைகளில் பாடவேறுபாடுகள் 4. தொல்காப்பிய மூல பாடவாய்வு என நான்கு கட்டுரைகள் உள. இறுதிக் கட்டுரையில் 61 பாடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

தொல். பாடவேறுபாடுகள் - வெ.ப. பகுப்புமுறை

தொல். பாடவேறுபாடுகளை 1. எழுத்து வேறுபாடுகள் 2. சொல் வேறுபாடுகள் 3. பொருள் வேறுபாடுகள் 4. இலக்கண வேறுபாடுகள் 5. ஒப்புநிலை வேறுபாடுகள் என ஐந்து வகையாகப் பிரித்து வெ.ப. ஆய்வு செய்துள்ளாா

எழுத்து வேறுபாடுகளில் 1. எழுத்துச் சேர்க்கை 2. எழுத்து விடுபடல் 3. எழுத்து மாற்றம் 4. எழுத்து முன்பின் மாற்றம் ஆகியன அமைந்துள்ளன.