பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv

குறிப்பு முதல் இரண்டு இடங்களில் காணப்படவில்லை. எல்லா இடத்திலும் ஒடு என்பதே மூன்றன் உருபாகப் பயிலப்படவேண்டும் என்பது அவர் கருத்து.


விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர் (418)

இத் திருக்குறட் பாவில் ஒடு, ஓடு இரண்டும் ஒருங்கே காணப்படுகின்றன.

இவற்றையெல்லாம் ஒருங்கு வைத்து ஆராயுங்கால் ஒடு என்பதே மூன்றன் உருபு எனவும், செய்யுளோசை கருதிப் பலவிடங்களில் இவ்வடிவம் ஓடு என நீட்டல் விகாரம் பெற்று நிற்கிறது எனவும் புலனாகிறது. பயிற்சியின் மிகுதியால் விகாரம் பெற்ற ஓடு என்னும் வடிவமும் இயல்பான வடிவம் போலவே கருதப்பட்டுப் பேச்சு வழக்கிலும் இடம் பெற்று விட்டது எனலாம். (எடுத்துக்காட்டு:- அவனோடு பேசாதே.)

4. அகரச்சுட்டு அன்றியெனத் திரிதல்

நூற்பா 551இன் ஈற்றடி அன்றியனைத்தும் பெயர்ப்பய னிலையே என்பதாகும். இப்பகுதியின் சிறப்புரையில், 'அகரச் சுட்டு அன்றி என ஈறு திரிந்து நின்றது' எனச் சேனாவரையர் எழுதுகிறார்.

தொல். 145, 211, 225, 624. 642, 909, 910, 933 ஆகிய நூற்பாக்களில் இத்திரிபைக் காணலாகும். "பலவற்றைத் தொகுத்துத் தொகை கூறுமிடத்திலே அகரச்சுட்டு அன்றி என்று ஆகும்" என்பார் தி.வே.கோ.

ஆனால் ஆபிரகாம் அருளப்பன் தம் இலக்கண ஆய்வுக்கட்டுரைகள் என்னும் நூலில், "இவற்றில் காணும் அன்றி அல்லடியாகப் பிறந்த எதிர்மறை வினையெச்ச வடிவைக் கொண்டிருப்பினும் பொருள் வகையால் இது எதிர்மறையும் அன்று; வினையெச்சமும் அன்று; மற்று ஒர் அசைநிலை இடைச்சொல்” என்று எழுதியுள்ளார். (அன்மைப் பொருளும் இன்மைப் பொருளும் என்னும் கட்டுரை)

5. லகர வீற்றுப் புணர்ச்சி

லகரமெய் வருமொழிக் ககரத்தொடு புணரும் போது இயல்பாகவோ றகர மெய்யாகத்திரிந்தோ புணரும் என்பது விதி. எடுத்துக்காட்டு: முதல் + கருவி = முதல் கருவி அல்லது முதற்கருவி; ஏவல் கண்ணிய அல்லது ஏவற்கண்ணிய.

ஆனால் சில ஏடுகளில் இப்புணர்ச்சி முதல்க்கருவி, ஏவல்க் கண்ணிய என்பது போல ககர மெய் தோன்றிக் காணப்படுகிறது.

இத்தகைய ககரமெய் பெற்ற முதலக்கருவி என்பது போன்ற உருவத்திலிருந்து முதற்கருவி என்னும் இலக்கிய வடிவம் உருவானதாக இன்றைய மொழியியலாளர் கூறுவர். கம்பராமாயணப் பதிப்பில் டி.கே. சிதம்பரநாத முதலியார் ல் + க = லக்க என்ற புணர்ப்பையே மேற்கொண்டுள்ளார்