பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகத்தின்
முன்னுரை

தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் தமிழ் மொழியின் இரு கண்கள் ஆகும் என மொழியுலகம் கருதுகிறது.

தொல்காப்பியம் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்குக் குறையாத பழமையுடையது. பல உரையாசிரியர்களால் உரை வகுக்கப் பெற்ற பெருமையை உடையது. தொல்காப்பியத்தின் நேரடித்தாக்கம் மலையாள மொழியிலக்கணமாகிய லீலா திலகத்திலும், மறைமுகத் தாக்கம் கேசிராஜாவின் கன்னட இலக்கணமாகிய சப்த மஞ்சரியிலும் காணப்படுகிறது. ஆந்திர முதல் இலக்கண நூலிலும் அதன் கூறுகள் காணப்படுவதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

தொல்காப்பிய ஆய்வு ஆழமாக நடைபெறவேண்டும் என்ற நோக்கத்துடன் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக உழைத்து வருகிறோம். தொல்காப்பியப் படிப்பில் முனைந்து நின்ற பாளையங்கோட்டை திரு. அ. அருளப்பனாருக்கு 1972இல் ஒராண்டிற்கான முதுநிலை ஆய்வுத்தகைமை வழங்கப்பட்டது. பேரா. உ.சுப. மாணிக்கனாருக்கு 20-6-79 முதல் 2 மாதங்களுக்கும் 18-8-82 முதல் 10 மாதங்களுக்கும் முதுநிலை ஆய்வுத்தகைமை வழங்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தோடு தொடர்பு கொண்ட சமயத்தில் தொல்காப்பியச் சொல்லடைவும், விளக்கமும் எழுதுவதற்கு ஒரு மொழியியல் ஆய்வாளர் நியமிக்கப்பட்டார். விரிவுரை ஒன்று எழுதுமாறு பேரா. வ.சுப.மாணிக்கனாருக்கு ஈராண்டு உயரிய தகைமையைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியது. தொல்காப்பியத்தின் இளம்பூரணர் உரையைச் செப்பம் செய்வதற்காகப் பேரா. அடிகளாசிரியர் நியமிக்கப் பெற்றார். எனினும் தொல்காப்பிய ஆய்வில் கணிசமான முன்னேற்றம் ஏற்படவில்லை.

பன்னாட்டுத் திராவிடவியல் நிறுவனம் தொல்காப்பியப் பாடவேறுபாடுகளைத் தொகுப்பதற்காக முனைவர் ச.வே. சுப்பிரமணியத்திற்குத் தகைமையொன்றை ஈராண்டு வழங்கியது. தமிழ்நாட்டின் சுவடி நூலகங்கள் பலவற்றிற்கும் அவர் சென்று சுவடிகளின் விவரங்களைக் குறித்துக் கொண்டதுடன், சென்னை டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் நூலகத்தில் ஒரிரு மாதங்கள் மயிலம் பேரா. சிவசுப்பிரமணியத்தின் உதவியுடன் பாடபேதங்களைத் திரட்டினார். அவரைத் தொடர்ந்து பேரா. கே.எம். வேங்கடராமையா திரு.ச.வே.சு. தொகுத்த பல செய்திகளை முறைப்படுத்தியும், புதியன திரட்டியும், விரிவாக்கியும், பல நிறுவனங்களுக்குச் சென்று செய்தி சேகரித்தும் மூன்று அதிகாரங்களையும் செம்மைப்படுத்தினார். விபத்து ஒன்றில் அவர் காலமானதால் பழைய இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுள்ள அறிஞர் ப.வெ. நாகராசனார் கையெழுத்துப் படியை