பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

தமிழ்:

தொடக்கக் காலம் தெரியாத மிகவும் பழைய மொழி தமிழ். மூவாயிரம் ஆண்டுகட்குமுற்பட்ட இலக்கிய இலக்கண வளம் உடைய தமிழ். இப்போது கிடைத்திருக்கும் நூல்களுள் பழமையானது தொல்காப்பியம். இதன் ஆசிரியர் தொல்காப்பியர் இவர், தமக்கு முன்பே பலர் நூல்கள் எழுதியுள்ளார்கள் எனப் பலவிடங்களில் கூறியுள்ளார். இந்நூல் கி.மு.500 அல்லது கி.மு. 1000ஆண்டுக்கு முற்பட்டது எனக்கூறப்படுகிறது. பிறமொழிச்சொற்கள் கலக்காமல், குறிப்பாக வடமொழிச்சொற்கள் கலக்காமல் எழுதக்கூடிய வளம் உடைய மொழி தமிழ். இது மேன்மேலும் வளர்ச்சி பெற்று வருகிறது.

தெலுங்கு:

தெலுங்கு மொழி ஆந்திராவில் வழங்கப்படுகின்றது. ஆந்திரா என்பது மொழியைக் குறிக்காது; நாட்டையே குறிக்கும். மொழியின் பெயர் தெலுங்கு என்பதே. இதற்குத் தெனுகு, தெலுகு என்னும் வேறு பெயர்களும் உண்டு. தெற்கேயிருந்து வந்தது தெனுகு என்றும், தெளிவுடையது தெலுகு என்றும் ஒரு வகைப் பெயர்க் காரண விளக்கம் கூறப்படுகிறது.

தெலுங்கில் சமசுகிருதச் சொற்களும் அதன் திரிபான பிராகிருதச் சொற்களும் மிக்குள்ளன. சமசுகிருதச் சொற்கள் சிறிதும் மாறுபடாமல் தற்சமச் சொற்களாகத் தெலுங்கில் கலந்து வழங்கப்படுகின்றன. ஆரியாவர்த்தத்திற்கும் திராவிடத்திற்கும் இடையில் தெலுங்கு நாடு இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சமசுகிருதத்திலிருந்து தெலுங்கு வந்ததாகக் கூறுவாரும் உளர்.