பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கி.பி. 9 ஆம் நூற்றாண்டிற்கும் 14 ஆம் நூற்றான்டிற்கும் இடையே பல மாறுதல்கள் நிகழ்ந்தன. மலையாளத் தமிழும் பிற பகுதித் தமிழும் கலந்த நடை “மிசிர பாஷை” எனப்பட்டது; இதைப் பார்ப்பனர் அல்லாதார் பேசினர். மலையாளத் தமிழும் சமசுகிருதமும் கலந்த நடை ‘மணிப் பிரவாளம்’ எனப்பட்டது; இதனைக் கோயில் பூசனை செய்பவரும் உயர்ந்த வகுப்பினர் என்று சொல்லிக் கொள்பவரு மாகிய ‘நம்பூதிரி’ என்னும் இனத்தினர் பேசி வந்தனர். 16 ஆம் நூற்றாண்டளவில், மேற்கூறப்பெற்றுள்ள இரண்டு நடைகளும் கலக்கவே, இப்போதுள்ள மலையாள மொழி உருவாயிற்று. இது ஏறக் குறைய மாறாமல் இன்றளவும் நீடித்து நிற்கிறது.

கி.பி. 12 - 13 ஆம் நூற்றாண்டளவில் சீராமன் என்பவர் ‘இராம சரிதம்’ என்னும் நூல் இயற்றினார். இதில் யுத்தகாண்டம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் கலப்பு நடையில் சில பாடல்களும் சிறுசிறு நூல்களும் இயற்றப் பெற்றன. 15 ஆம் நூற்றாண்டில் செறுசேரி என்பவர், ‘கிருஷ்ண காதா’ என்னும் நூல் இயற்றினார். 16 ஆம் நூற்றாண்டினர் எனக் கருதப்பெறும் ‘துஞ்சத்து எழுத்தச்சன்’ என்பவர் ‘அத்தியாத்தும இராமாயணம்’, ‘பாரதம்’ முதலிய நூல்கள் இயற்றினார். மலையாள மொழியை ஒருமுகப்படுத்தி நிலைபெறச் செய்த பெருமை இவருக்கு உண்டு. இதனால் இவர் மலையாள மக்களால் பெரிதும் மதித்துப் போற்றப்படுகிறார். இம்மொழிக்கு 14 ஆம் நூற்றாண்டில் ‘லீல திலகம்’ என்னும் இலக்கண நூல் சமசுகிருதமொழியில் இயற்றப்பெற்றது வியப்பிற்கு உரியது. வழிகாட்டி (Guide) நூலாக, ஒரு மொழிக்கு இன்னொரு மொழியில் இலக்கணம் எழுதுவதே இயல்பு.