பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179

இருக்கிறது. வளர்வான், வளர்வாள் வளர்வார், வளரும், வளர்வேன், வளர்வோம்.-எனத் தமிழில் உள்ளன வற்றை யெல்லாம் குறிக்க, மலையாளத்தில் ‘வளரும்’ என்னும் ஒரே சொல் இருக்கிறது. இது எதிர்கால வினை முற்று. இதன் இறுதியில் ‘உம்’ முடிந்திருக்கும்.

மேலுள்ள எடுத்துக் காட்டுகளால் அறியப்படுவது: தமிழில், வினைமுற்றில் உயர்திணை-அஃறிணை, ஆண்பால் - பெண்பால், ஒருமை - பன்மை, தன்மை - படர்க்கை என்ற பாகுபாடுகள் உள்ளன. ஆனால், மலையாளத்தில் எந்தப் பாகுபாடும் இல்லை. எல்லாவற்றிற்கும் பொதுவாக ஒரே வினைமுற்றே உண்டு-என்பதாம்.

குழந்தை ஒப்புமை:

இந்த அமைப்பைக் கொண்டு சிலர் கூறுவதாவது:- குழந்தைகளிடம் சொல்வளம் கிடையாது. குழந்தை குறைந்த சொற்களைக் கொண்டே பலபொருள்களைச் சுட்டும். தாத்தாபோல் இருக்கும் மாமாவும் தாத்தாதான். பாட்டிபோல் இருக்கும் அத்தையும் பாட்டிதான். அம்மா போல் இருக்கும் பெண்கள் எல்லாரும் அம்மாதான் - அக்கா - அண்ணன் - தம்பி போல் இருக்கும் எல்லாரும் அக்காதான் - அண்ணன்தான் - தம்பிதான். பெயர்ச்சொற்களின் நிலை இதுவெனில், வினை முற்றுகளின் நிலையும் இது போன்றதே. அம்மா வந்திச்சி, அப்பா அடிச்சுது, அக்கா கொடுத்திச்சி, அண்ணன் சொல்லிச்சி, மாடுங்க வந்திச்சி, நான் வாங்கிச்சி - எனக் குழந்தைகள் திணை, பால், எண், இட வேற்றுமை யின்றி எல்லாரையும் ஒரே மாதிரியாகக் குறிக்கும். குழந்தைகளின் மற்ற பேச்சுகளும் கொச்சையாயிருக்கும். குழந்தைகள் வளர வளரப் பேச்சு திருத்தமா யிருக்கும்.