பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180


இவ்வாறே, மலையாளத்தில் எல்லாவற்றிற்கும் ஒரே வினைமுற்று இருப்பதும்-கொச்சை வடிவங்கள் இருப்பதும் மலையாளம் தொடக்கக் காலப் பழைய மொழியாகும் என்றும், தமிழ் மொழியும் தொடக்கத்தில் இப்படித்தான் இருந்திருக்கும் என்றும், குழந்தை வளர வளரத் திருத்தமாகப் பேசுவதுபோல் நாளாக நாளாகத் தமிழில் திணை பால் - எண் - இடப் பிரிவுகள் ஏற்பட்டன என்றும், இதனால் தமிழுக்கு முந்திய, மொழி மலையாளம் என்றும், எனவே, மலையாளத்திலிருந்துதான் தமிழ் பிறந்தது என்றும், சிலர் கூற இடம் தருகின்றன.

மலை வாணர் மொழி:

இந்தக் குழந்தை ஒப்புமையைக் கொண்டு, மலையாளப் பகுதியில் இருந்தவர்கள் திருத்தம் பெறாமல் மலைகளில் வாழும் மக்களைப்போல் கீழ்நிலையிலேயே இருந்து விட்டனர் என்றும், தமிழ் நாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் தொடக்கத்தில் திருந்தாமொழி பேசினாலும், நாளடைவில் வளர்ச்சி ஏற்பட ஏற்பட மொழியில் தக்க சீர் திருத்தம் மேற்கொண்டனர் என்றும் கூறலாம் அல்லவா? மலையாளிகளாகிய ஒரு பகுதியினர் மட்டும் எவ்வாறு மொழித் துறையில் கீழ்நிலையில் இருக்க முடியும்?-என்று கேட்கலாம். இன்றும், மலைகளில் வாழும் நாகரிக மற்ற மக்கள் மொழித்துறையில் ஏன்-எவ்வாறு கீழ் நிலையில் உள்ளனர்?-என்று ஆராய்ந்து எண்ணிப் பார்த்தால் இதற்குத் தக்க பதில் கிடைத்து விடும். தமிழ்மொழியில் எழுத்துகளும் இலக்கியங்களும் தோன்றியதற்குச் சில ஆயிரம் ஆண்டுகள் பின்னரே, மலையாளத்தில் எழுத்துகளும் இலக்கியங்களும் உருவாயின என்பதையும் ஈண்டு நினைவு கூர வேண்டும்.