பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

போது அப்போது பேசப்பட்ட ஒலி வடிவமே எழுதப்பட்டதாம். நீண்ட நாள் பேச்சு இலத்தீனும் எழுத்து இலத்தீனும் ஒன்றாகவே இருந்தமையை மறக்க முடியாது. நாளடைவில் எழுத்து வடிவத்தினின்றும் பேச்சு வடிவம் சிதைந்து வேறு மொழி போல் காணப்பட்டது. அந்தப் பேச்சு இலத்தீன் 'ரோமன் மொழி' (Lingua Romana) என்னும் பெயர் பெற்றது. இந்த அடிப்படை உண்மை பெரும்பாலும் மற்ற மொழிகட்கும் பொருந்தும். பின்னர், அந்த எழுத்து இலத்தீன் தனி மொழி போல் ஆகி, இன்று வரையும் பேசப்படாமல் எழுத்து வடிவத்தில் மட்டும் இருப்பதையும் நினைவுகூர வேண்டும்.

இவ்வாறு ஒரு மொழியிலிருந்து சிதைந்து, பிரியும் மொழிகளைக் கிளை மொழிகள் - இன மொழிகள் என்றெல்லாம் கூறலாம். மற்றும், ஒரு மொழியே, வட்டாரத்திற்கு வட்டாரம், காலத்திற்குக் காலம், இனத்திற்கு இனம், சமயத்திற்குச் சமயம், குலத்திற்குக் குலம், ஊருக்கு ஊர், தெருவிற்குத் தெரு, உறவினர்களிடையேயும் குடும்பத்திற்குக் குடும்பம், ஏன், தனி மாந்தர்க்குத் தனி மாந்தர் வேறுபடலாம். ஒருவரே, பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு விதமாகப் பேசலாம். இந்தப்போக்கு மிகுதிப்படுமாயின், இடத்திற்கு இடம் ஒரே மொழி வேறுபட்டுப் பல கிளைகளாகப் பிரியலாம். இவ்வாறு பிரிந்தவையே, திராவிடக் குடும்ப மொழிகள் உட்பட உலகின் பல்வேறு குடும்ப மொழிகளும் ஆகும்.

எழுத்தும் பேச்சும் ஒன்றாயிருந்த ஒரு மொழியிலிருந்து அந்த கிளைமொழிகள், நீண்ட காலம் எழுத்து வடிவம் பெறாமல் பேச்சளவிலேயே இருக்கும். பின்னர், அம்மொழிகளைப் பேசும் அறிஞர்கள் சிலர் கூடி, மொழிக்குப் புதிய எழுத்து வடிவம் படைப்பார்கள். அதன் பின்னர், ஒவ்வொரு பேச்சு மொழியும் புதுப்புதுப் பெயர்பெறும்.