பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

115



வேறு தொழிற் பயிற்சிகளைக் கற்பிக்கக் கூடிய போதிய திறமை வாய்ந்த ஆசிரியர்கள் அப்போது கிடைக்காத காரணத்தால், முதலில் மோட்டார், வானொலி தொழில்களுக்குரிய பயிற்சிகள் போதிக்கப் பட்டன.

திரு. நாயுடுவை சர்.ஆர்தர் ஹோப் கேட்டுக் கொண்டதற் கேற்ப, அவரே அந்த பாலிடெக்னிக்கு கெளரவ இயக்குநராகவும், முதல்வராகவும் இருந்து - ஆசிரியராகவும், நிர்வாகியாகவும் பணியாற்றினார்.

ஆர்தர் ஹோப் -
பொறியியல் கல்லூரி :

சர்.ஹார்தர் ஹோப் பெயரால் தொழிற் நுட்பப் பாலிடெக்னிக் சிறப்பாக நடைபெற்று வந்தது. இரண்டாவதாக, கவர்னரது ஊக்கத்தையும் - ஆதரவையும் கண்ட திரு. ஜி.டி.நாயுடு அவர்கள், காற்றுள்ள போதே துற்றிக் கொண்டால் கோவை நகருக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும் என்ற எண்ணத்தில், கோவை நகரில் 1945-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9-ஆம் நாளன்று, அதாவது, பாலிடெக்னிக் துவக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கெல்லாம், மீண்டும் ஒரு பொறியியற் கல்லூரியைத் துவக்கினார். என்ன பெயர் தெரியுமா அக் கல்லூரிக்கு?

'சர்.ஹார்தர் ஹோப் பொறியியல் கல்லூரி' என்றே திரு. நாயுடு அதற்கும் நன்றிக் கடனாகப் பெயர் சூட்டினார். அக் கல்லூரிக்குப் பல லட்சம் ரூபாயில் கட்டிடங்களையும், நன்கொடை களையும் வழங்கிடத் தயாரானார். அரசாங்கமும் அவருக்கு மிக நன்றாக ஆதரவு வழங்கி ஊக்குவித்தது. துவங்கப்பட்ட பிறகு இக் கல்லூரியின் முழுப் பொறுப்பையும் திரு.நாயுடு அரசாங்கத்திடமே ஒப்படைத்து விட்டார்.

திரு. நாயுடு அவர்கள் எதையெதை எவ்வப்போது, எவரெவரைக் கொண்டு மக்களுக்கு நன்மைகளைச் செய்ய முடியுமோ, அவ்வப்போது அதையதை, அவரவரிடம் ஆதரவு பெற்றுச் செய்வதில் மிகவும் வல்லவர் என்பதால், சர்.ஹார்தர் ஹோப்பை பயன்படுத்தி அந்த இரு தொழிற் பள்ளிகளைத் துவக்கிப்