பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


பயன்படுத்தி வெற்றி பெற்றவர் திரு. நாயுடு அவர்கள். ஆனால், ரசாயன முறைகளைத் தான் செய்தாரே தவிர, ஆரஞ்சு விதைகளில் எந்தவித மாறுதலையும் அவர் செய்யவில்லை.

போத்தனூர் நகரத்தில், பெரும்பொருட்களை செலவு செய்து சொந்தமாக ஒரு விவசாயப் பண்ணையை ஏன் உருவாக்கினார் ஜி.டி. நாயுடு? அந்தப் பண்ணையில் உள்ள பயிர் வகைகளில், மரம், செடி. கொடிகளில் விஞ்ஞான வித்தைகளைப் புகுத்தி ஏன் ஆராய்ச்சி செய்தார் நாயுடு என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால், அவருடைய உண்மையான மக்கள் நேய விவசாய தத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

நமது நாடு வறுமையால் வாடும் நாடு. பசியைப் பிணிகளாகக் கொண்ட மக்கள் உழலும் நாடு. இப்படிப்பட்ட மக்களின் பசியைப் போக்க, வறுமைகளை அகற்ற, நாயுடு அவர்கள் கண்டுபிடித்துள்ள உணவு வகைகள் ஆக்கம்; பெரிதும் அவர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கத்தாலே தான், அவர் விவசாயத்தில், வேளாண் துறையில் விஞ்ஞானத்தைப் புகுத்தி விந்தைகளைச் செய்தாரே தவிர, ஏதோ பேருக்கும், புகழுக்கும், விளையாட்டுகளுக்காகவும் அல்ல என்பதை நாம் சிந்தித்து உணர வேண்டிய ஒரு சம்பவம் ஆகும்.

தான் கண்டுபிடித்த பருத்திச் செடிகளின் விதைகளை ஏழை விவசாயப் பெரு மக்களுக்கு இலவசமாகக் கொடுக்க திரு. நாயுடு முன் வந்தார். ஆனால், ஒருவராவது அவரது உள்ளத்தைப் புரிந்து கொண்டு, அதை வாங்கிப் பயிரிட முன் வரவில்லை. இப்படிப்பட்ட நாட்டில் இவ்வளவு அறிவீனர்களாக வாழும் மக்களை யார் காப்பாற்ற முன் வருவார்கள்?

எவரும் நாயுடு அவர்கள் இலவசமாகக் கொடுக்க முன் வந்த விதைகளை வாங்கிப் பயிர் செய்ய முன் வராததைக் கண்ட அவர், பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தார். அந்த ஆங்கில விளம்பரம் வருமாறு :

“ஐந்து பங்கு அதிகமான விளைச்சலைக் கொடுக்கும் பருத்தி விதைகளும், செடிகளும் விற்பனைக்குத் தயார். ஒரு விதையின்