பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

137


விலை 10 ரூபாய், செடியின் விலை 1000 ரூபாய் என்று விளம்பரம் கொடுத்தார் திரு. நாயுடு.

ஏன் அந்த விதைகளுக்கு விலைகளை நிர்ணயம் செய்தார்? சும்மா கொடுத்த மாட்டை நிலாவில் கட்டி ஒட்டும் புத்தி படைத்த மாக்களுக்கு விதைகளை இலவசமாக கொடுத்தும்கூட, வாங்க முன்வராத மக்கள் இடையில், பண வசதி இருக்கும் பண்ணையார்களாவது முன் வரமாட்டார்களா? என்ற எண்ணத்தில்தான் திரு. ஜி.டி. நாயுடு விளம்பரம் செய்து பார்த்தார்.

விளம்பரத்தை தமிழிலா கொடுத்தார் திரு. நாயுடு? இங்லிஷ் மொழியில் அல்லவா செய்தார் விளம்பரத்தை? சில நாட்களுக்குள், அந்த விளம்பரத்தின் மகிமையால், எண்ணற்றக் கடிதங்கள் உலகம் முழுவது இருந்து வந்து குவிந்தன என்றால், தமிழன் மனப்பான்மையை என்னவென்று கூறுவது? அந்த விளம்பரத்தைக் கண்ட அறிவுடைய மேலை நாட்டு விவசாயிகள் பணத்தை திரு. நாயுடுவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

போத்தனூரில் அமைந்த விவசாயப் பண்ணையை, சுற்றுலா பயணிகளைப் போல அவ்வூர் மக்கள் திரண்டு வந்து வேடிக்கைப் பார்த்தார்கள். ஆனால், பண்ணையின் பலனைத் தமிழ் நாட்டார் பயன்படுத்திக் கொள்ளும் அறிவீனர்களாக இருந்து விட்டார்கள்.

இந்தியா முழுவதிலும் இருந்த மக்கள், புகழ் பெற்ற தலைவர்கள், விஞ்ஞான உள்ளம் படைத்த ஆய்வாளர்கள், கோவை, நீலகிரிப் பகுதிக்கு வருகை தரும் சுற்றுலா மக்கள், கோயில் குளம் சுற்றும் புனித யாத்திரிகர்கள் கூட போத்தனூர் நகர் சென்று ஜி.டி. நாயுடு விஞ்ஞான விவசாயப் பண்ணையின் அருமைகளைக் கண்டு பெருமைப்பட்டார்கள்.

விஞ்ஞான வித்தைகளை விளக்கிக் கொண்டிருந்த திரு. ஜி.டி. நாயுடுவின் பண்ணையைப் பார்த்துவிட்டுச் சென்றவர்கள், பாராட்டுக் கடிதங்களை எழுதி, நாயுடு அவர்களது உழைப்புக்கும், அறிவுக்கும் மரியாதை காட்டி மகிழ்ந்தார்கள். அந்தக் கடிதங்களிலே சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறோம். படித்துப் பாருங்கள் தமிழன் பெருமையை