பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

157



உங்களுடைய தந்தையாரின் மாத வருமானம் என்ன? அதிலிருந்து நீங்கள் செய்யும் செலவு, அந்தச் செலவில் உங்களது உடை வகைகள், பூட்சு வகைகள், பற்பசை, தலை எண்ணெய், பிளேடு, மருந்து, பவுடர், சுனோ. வாசனை திரவிய வகைகள். உணவு விடுதிச் செலவுகள் ஆகியவற்றுக்கு ஆகும் தொகை முதலியவற்றைப் பற்றி ஒரு முறையாவது கணக்குப் போட்டுப் பார்த்திருக்கிறீர்களா?

கல்லூரியை விட்டு வெளியே போனதும், நீங்கள் இவ்வளவு காலம் செலவு செய்தற்கு என்ன இலாபம் பெறப் போகிறீர்கள்?

கல்லூரியில், நீங்கள் உங்களது வாழ்க்கை எனும் கட்டிடத்திற்கு அடித்தளம் தானே அமைத்திருக்கிறீர்கள்? இனிமேல் தானே நீங்கள் உங்களது கட்டிடத்திற்கு கூரை வேய வேண்டும்? சன்னல் அமைக்க வேண்டும்? கட்டிடத்தைக் கட்டி முடிக்க வேண்டும்? அப்போதுதானே நீங்கள் உங்களுடைய குடும்பத்தோடு வசதியாக வாழ்க்கையை நடத்த முடியும்?

வெளி உலக வாழ்க்கையில், மாணவர்களே! நீங்கள் இனி மேல் தான் புகப் போகிறீர்கள். அப்பொழுது நீங்கள் கல்லூரியில் கற்ற அறிவைப் பயன்படுத்தி வெற்றி காணவேண்டும்.

வாழ்க்கைக்கு விஞ்ஞானம்,கணக்கு,வாணிகம் போன்றவை பெரிதும் பயன்படும் துறைகளாகும். இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையன.

நான் தொழில் துறையில் இலாபம் பெற்றேனென்றால், அதற்கு எனது தொழிலறிவு மட்டுமே காரணமன்று. நான் பஞ்சு வாணிகத்தில் பஞ்சு படாத இன்னல்களை, துன்பங்களைப் பட்டேன். பம்பாய் நகர் வரை கூடப் பறந்தேன். பஞ்சு வாணிகத்தில் நான் பெற்ற அனுபவ அறிவு இது.

ஆனால், பஞ்சு வியாபரத்தில் நான் பட்ட நட்டங்கள்தான். தொழில் துறையில் எனக்கு லாபம் பெற்றுத் தந்தது. அது போலவே நீங்களும் அனுபவத்தின் மூலம் தான் நிறையக் கற்றுக் கொள்ள முடியும்.