பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

161



இவை எல்லாம் உணவாலும், தட்ப வெப்பத்தாலும், சூழ்நிலைகளாலுமே ஏற்படுகின்றன. மனம் உறுதியாக இருந்தால் இந்த மாற்றங்களை நாம் பெரும் அளவுக்குத் தடுத்து விடலாம். எனது பேச்சு உங்களுக்கு இப்போது பொருத்தமற்றதுபோல தோன்றலாம். ஆனால், உணவு, உடல், மனம் என்ற மூன்றும் ஒன்றோடொன்று இணைந்தன என்பதற்கு ஒரு சான்று கூறுகின்றேன்.

பாடும் ஒரு கிராமபோன் பெட்டிக்கு முன்னால் ஓர் எக்ஸ்ரே' கருவியைப் பொருத்தி, அதற்கு முன்னால் ஒரு பூனையை நிறுத்தி உணவுக் கொடுத்தால் அந்தப் பூனையின் வயிற்றில் நடைபெறும் மாறுதல்களை எக்ஸ்ரேப் படம் மூலம் காணலாம்.

பூனையின் வயிற்றில் ஒரே அளவாக ஹைடிரோ குளோரிக் அமிலம் சுரப்பதையும், உணவு சரியாகச் செரிப்பதையும் பார்க்கலாம்.

ஆனால், கிராமபோன் கருவியில் பாடும் பாட்டை மாற்றி, நாய் குரைப்பதைப் போன்ற ஒலி எழுப்பும் இசைத் தட்டைப் போட்டால், பூனைக்குப் பயமும், கோபமும் ஏற்படுகின்றன. உடனே அதன் வயிற்றிலும் மாறுதல் ஏற்படுகின்றது; உணவு செரிப்பது தடைபடுகின்றது. அதனால் சோர்வும், நோயும் ஏற்படுகின்றன. இதை நீங்கள் நன்றாக உணர வேண்டும்.

மனித உணர்வுக்கும், உடலுக்கும் உள்ள தொடர்பை நீங்கள் பலமுறை அனுபவித்திருக்கலாம். யாராவது ஒருவருக்குத் திடீரென்று கோபமோ, துக்கமோ வந்தால், உடனே அவரது உடலில் சோர்வு ஏற்படுகின்றது. உடல் முழுவதும் வேர்க்கின்றது. அதற்குக் காரணம் என்ன?

உணவோ, அல்லது மருந்தோ அல்லது தட்ப வெட்டமோ அந்த மாறுதலை ஏற்படுத்தவில்லை. அப்படியானால் அந்த மாறுதலை உண்டாக்கியது எது? மனமல்லவா?

எனவே, மனமும் - உடலும், உணவுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதை நீங்கள் உணர வேண்டும். மூன்றையும் நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும்.